லஞ்சம் வாங்கிய புகாரில் தேனி மருத்துவக் கல்லூரி டீன் சஸ்பெண்ட்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஏ.எல்.மீனாட்சிசுந்தரம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

தேனியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கேன்டீனில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் தனக்கு பணம் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஏ.எல்.மீனாட்சிசுந்தரம், கேன்டீன் ஒப்பந்ததாரர் மாரிசாமி வசம் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஏ.எல்.மீனாட்சிசுந்தரம் லஞ்சம் பெறும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வீடியோ தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சித்திரிக்கப்பட்ட வீடியோ என முதல்வர் ஏ.எல்.மீனாட்சிசுந்தரம் மறுப்பு தெரிவித்திருந்தார். இருந்தாலும் வெளியான வீடியோவில் ஏ.எல்.மீனாட்சிசுந்தரம் முன்பு இருந்த மேசை மீது கரன்சி ரூபாய் நோட்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்கு சென்றுள்ளது. அதன் பேரில் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

தேனி மாவட்ட சுகாதாரம் மற்றும் ஊரகப் பணிகள் இணை இயக்குநர் இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ளவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in