

டெல்லி: "மணிப்பூரில் கல்லூரி மாணவர்கள், தொழிற்கல்வி படிக்கின்ற மாணவர்கள் அவர்களுடைய கல்வியை தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமானது" என்று அம்மாநிலத்துக்கு சென்று திரும்பிய எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்றிருந்த திருமாவளவன் கூறியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி - குகி இனத்தவர் இடையேயான கலவரத்தில் இதுவரை 182 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் குகி பழங்குடியின பெண்கள் இருவர் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மணிப்பூர் மாநில நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்ய நாடாளுமன்றத்தின் இருஅவைகளைச் சேர்ந்த 21 உறுப்பினர்கள் அடங்கிய (I.N.D.I.A)எம்.பி.க்கள் குழு டெல்லியில் இருந்து நேற்று (சனிக்கிழமை) மணிப்பூர் சென்றனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக இந்தக் குழு மாநில ஆளுநர் அனுசுயாவை ராஜ்பவனில் சந்தித்து அவரிடம் மனு அளித்தனர்.
இந்த குழுவில் இடம்பெற்று டெல்லி திரும்பிய, விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தங்கள் குடியிருப்புகளுக்குச் சென்று மீண்டும் தங்குவது பாதுகாப்பு இல்லை என்று, குகி மற்றும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்கள்.
மியான்மரில் இருந்து ஏராளமானவர்கள் மணிப்பூருக்கு இடம்பெயர்ந்து அவர்களால்தான் இங்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. என்ஆர்சியை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அங்கிருந்து இங்கு புலம்பெயர்ந்தவர்களை உடனடியாக திரும்ப அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் எடுத்து கூறினர்.
அதேபோல், குகி சமூகத்தைச் சேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களை, (I.N.D.I.A)எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்றிருந்த பெண் உறுப்பினர்கள் தனியே சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர் ஒருவரின் குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டதை நாம் அறிவோம். அதுதான் மிகப்பெரிய வைரல் வீடியோவாக வெளியே வந்தது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த வீரரின் மனைவியை சந்தித்தோம், பாதிக்கப்பட்ட அவர்களுடைய மகளை சந்திக்க இயலவில்லை. ஆனால், குழுவில் இருந்த மகளிர் எம்.பி.க்கள் அவர்களை தனியே சந்தித்தனர்.
இன்று காலை அம்மாநில ஆளுநரை சந்தித்தோம். நீண்ட நேரம் எங்களுடைய கருத்துகளை கேட்டுக்கொண்டார். இருதரப்பிலும் சுமுகமான வாழ்க்கை அமைய வேண்டும். அதற்கேற்ப மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள், குறிப்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர் படிப்புகள் படிக்கும் மாணவர்கள், பல் மருத்துவம் படிக்கின்ற மாணவர்கள், இம்பாலில் மீண்டும் சேர்ந்து எங்களால் படிக்க முடியாது. தங்களது கல்வியை தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதுகுறித்து ஆளுநரிடம் எடுத்து கூறினோம். ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்.
அங்கு அமைதி திரும்பும் என்று நம்புகிறோம். அங்கே அமைதி திரும்ப வேண்டும். அந்த மக்களின் குரலை இங்கே எதிரொலிப்பதற்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். இந்தியா கூட்டணி சார்பில் அங்கு சென்று திரும்பியவர்களின் அனுபவத்தை எடுத்துரைக்க அவையில் விவாதிக்க வாய்ப்பு உருவாகும் என்று நம்புகிறோம்" என்றார்.
மே மாதம் முதல் இந்த வன்முறை சம்பவங்கள் அங்கு நடந்து வருகிறது. இப்போதைய சூழலில் அந்த மக்களின் கோரிக்கை என்ன, என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "கிட்டத்தட்ட 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக ஒரு இடத்தில் தங்கியிருக்கின்றனர். அவர்களுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. அவர்களுக்கு நல்ல உணவு, மின் வசதி, குடிநீர் வசதி, உடை உள்ளிட்டவற்றை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும்.
கல்லூரி மாணவர்கள், தொழிற்கல்வி படிக்கின்ற மாணவர்கள் உள்ளிட்டவர்கள் அவர்களுடைய கல்வியை தொடருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமானது.
ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான தீர்வை உருவாக்குவதற்கு மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும். இரண்டு நிலையிலும் பாஜக அரசு பதவி வகிக்கும் நிலையில், இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது மிக எளிதான ஒன்று. ஆனால், இரண்டு அரசுகளும் அதில் பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறது என்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது. இரு சமூகத்து மக்களும் மத்திய மாநில அரசுகளின் மீது இருக்கும் வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், குறை கூறியுள்ளனர்" என்று அவர் கூறினார்.