Published : 30 Jul 2023 02:01 PM
Last Updated : 30 Jul 2023 02:01 PM
சென்னை: "தட்பவெப்ப காலநிலை மாற்றம் காரணமாக இருமல், சளி மற்றும் தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவ்வகை காய்ச்சலுடன் உடல் சோர்வு, உடல் வலி பாதிப்புகளும் இருப்பதால் தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி நோய்களைக் கட்டுப்படுத்த திமுக அரசு முன் வர வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த இரண்டு ஆண்டு கால திமுக அரசின் அலங்கோல நிர்வாகத்தாலும், சுகாதாரத் துறையின் அலட்சியப் போக்காலும் அரசு மருத்துவமனைகளையே நம்பி இருக்கும் பாமர மக்கள் முறையான சிகிச்சை இல்லாமல், மருந்து மாத்திரைகள் கிடைக்காமல் தங்கள் உயிரைக் காக்க போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான மருந்துகள் வழங்கப்படுவதில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட TamilNadu Medical Services Corporation Ltd (TNMSC)என்று
அழைக்கப்படும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் 3 முதல் 6 மாதங்களுக்குத் தேவைப்படும் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மொத்தமாக வாங்கி, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு தாமதமின்றி நேரடியாக வழங்கும் இந்நிறுவனம் இப்போது இருக்கிறதா என்பதே தெரியவில்லை.
அனைத்து பெரிய மருத்துவமனைகளிலும் லோக்கல் கொள்முதல் என்று அனைத்து மருந்துகளும் அதிக விலைக்கு உள்ளூரிலேயே வாங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளும் பெரியவர்களும் டெங்கு போன்ற விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு படை எடுத்து வருவதாக செய்திகள் வருகின்றன. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, போடி, பாளையங்கோட்டை பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
> தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் சுமார் 4 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்;
> அதே போல், நூற்றுக்கணக்கானோர் சிக்கன் குனியா நோயாலும், மலேரியா காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்.
> மேலும், சிக்கன் குனியாவால் பாதிக்கப்படும் நோயாளிகள், இந்நோயை கண்டறிவதற்குள், இரண்டு மூன்று நாட்களில் கடும் மூட்டு வலியினால் மிகவும் சிரமப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தட்பவெப்ப காலநிலை மாற்றம் காரணமாக இருமல், சளி மற்றும் தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவ்வகை காய்ச்சலுடன் உடல் சோர்வு, உடல் வலி பாதிப்புகளும் இருப்பதால் தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி நோய்களைக் கட்டுப்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும்.
> சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் ஏராளமான ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு படை எடுத்து வருவதாக அச்சு ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேவைப்படும் மருந்து பொருட்களை மொத்தமாக வாங்கித் தராததால், பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் ஏழை, எளிய நோயாளிகளுக்குத் தேவையான ஆன்ட்டிபயாட்டிக் மருந்து மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்து பொருட்கள் முழுமையாக இருப்பதை சுகாதாரத் துறை அமைச்சர்
உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன்.
"நோய் நாடி, நோய்முதல் நாடி... என்ற வள்ளுவன் அறிவுரைக்கேற்ப, பரவி வரும் நோய்களின் மூலக்கூறுகளை கண்டறிந்து அவைகளை ஒழிக்கும் பணியை தொய்வில்லாமல் செய்து அப்பாவி மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்று இந்த மக்கள் விரோத திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT