அரசின் மகளிர் முன்னேற்ற திட்டங்களுக்கு வலு சேர்க்கும் தோழி விடுதிகள் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் தோழி மகளிர் விடுதி திட்டம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தோழி விடுதிகள் - இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி. மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது.

டாக்டர் நடேசனாரின் 'திராவிடர் இல்லம்' போல், நமது திராவிட மாடலின் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைக்கொள்ளும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, வெளியூர்களில் தங்கிப் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ என்கிற அமைப்பைத் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது மாவட்டங்களில் 11 மகளிர் தங்கும் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பல்வேறு அடிப்படைத் தேவைகளோடு பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த இந்த விடுதிகளில் மாத அடிப்படையிலும் நாள் கணக்கிலும் பெண்கள் தங்கலாம். தேவைப்படுவோர் www.tnwwhcl.in என்கிற இணைய தளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in