Published : 30 Jul 2023 06:56 AM
Last Updated : 30 Jul 2023 06:56 AM
சென்னை: கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து உயர்கல்வித் துறையில் பொதுப்பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் 31 ஆண்டுகால ஆட்சியில், கல்வித் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. 2011-ல் திமுக ஆட்சியில் உயர் கல்வியில் 25 சதவீதமாக இருந்தமாணவர் சேர்க்கை, அதிமுக ஆட்சியில் 51 சதவீதமாக வளர்ச்சி பெற்று, இந்தியாவிலேயே உயர்கல்வித் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்ந்தது.
வளர்ச்சி பற்றி கவலையில்லை: ஆனால், கடந்த 2 ஆண்டு காலத்தில் திமுக அரசில், உயர்கல்வித் துறை சீரழிந்துவிட்டதாக கல்வியாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். துறையின் அமைச்சர் பொன்முடி,தான் ஒரு கல்வியாளராக இருந்ததை மறந்து, இளைஞர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய உயர்கல்வித் துறையின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதால், தமிழகத்தில் உயர்கல்வித் துறை அதல பாதாளத்துக்குச் சென்றுள்ளது.
நடப்பு கல்வியாண்டு முதல், தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவசரகதியில் உருவாக்கப்பட்டு, அவசரகதியில் திணிக்கப்படும் பொது பாடத் திட்டத்தால், தமிழகத்தில் உயர்கல்வியின் தரம் கேள்விக்குறியாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கல்வியாளர்கள் எச்சரிக்கை: பொதுப் பாடத் திட்டத்தால் தமிழக உயர் கல்வியின் தரம் குறையும் என்றும், பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 45 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வரும் தன்னாட்சி அந்தஸ்தை இழக்க நேரிடும் என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
எனவே, கல்வித் துறையில் ஏதேனும் மாறுதல்களைக் கொண்டுவரும் முன்பு, கட்சி கண்ணோட்டம் இல்லாத உண்மையான கல்வியாளர்களை அழைத்து, இளைஞர்களின் நலனை மனதில்கொண்டு, உயர்கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT