

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கில் நேரிட்ட வெடிவிபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்த பிரார்த்திக்கிறேன்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாசுகிடங்கில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனது பிரார்த்தனைகள் துயரமடைந்த குடும்பத்தினருடன் இருக்கும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். சிகிச்சை பெற்றுவருபவர்களும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். சிகிச்சையில் இருப்போர் பூரண நலம் பெற்று, விரைவில் வீடு திரும்பவும் பிரார்த்திக்கிறேன். தமிழகத்தில் சமீப காலமாகபட்டாசு ஆலை விபத்துகள் தினசரிசெய்தியாகி வருகின்றன. எனவேபட்டாசு தொழிற்சாலைகள், குடோன்கள் அரசு நிர்ணயித்த விதிகளின்படி இயங்குகிறதா என்பதைஅரசு கண்காணிக்க வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள செய்தி வருத்தமளிக்கிறது. வெடிவிபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக அரசு, இனிமேல் பட்டாசு ஆலைகள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசுக் கடைகள் ஆகியவற்றில் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பட்டாசுக் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து மிகுந்த வருத்தமளிக்கிறது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஏற்பட்ட விபத்தில் 8 பேருக்கு மேல் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெறும் அனைத்து தொழிற்சாலைகளிலும் போதிய பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? தொழிற்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
காங்கிரஸ் தமிழக சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகை: பட்டாசு ஆலைகள், கிடங்குகளில் அடிக்கடி வெடி விபத்துகள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. பட்டாசு ஆலைகளிலும், அவை பாதுகாத்து வைக்கப்படும் கிடங்குகளிலும் முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி, இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லை என்ற நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல வி.கே.சசிகலாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.