Published : 30 Jul 2023 07:18 AM
Last Updated : 30 Jul 2023 07:18 AM

தமிழக அரசின் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு இதுவரை ரூ.161 கோடி வழங்கல்

கோப்புப்படம்

சென்னை: புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.160.97 கோடி பணப்பலனாக மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர், பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12-ம் வகுப்பு முடிந்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது. எனவே, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவியர் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறலாம். அஞ்சல்வழிக் கல்வி அல்லதுஅங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது. வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறலாம். ஏற்கெனவே உயர்கல்வியில் சேர்ந்த மாணவியரும், மீதமிருக்கும் ஆண்டுகளுக்கான படிப்புக்கு இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்துக்கென புதிய மறுசீரமைக்கப்பட்ட வலைதளம் (https://www.pudhumaipenn.tn.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் தாங்கள் உயர்கல்வி பயிலும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரைக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி ‘புதுமைப் பெண் திட்டம்’ முதல்வரால் 2022-ம் ஆண்டு செப்.5-ம் தேதி முதல் கட்டமாகவும், கடந்த பிப்.8-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தொடங்கிவைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் நிதியாண்டில் முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் 1.16,260 மாணவிகளும், இரண்டாம் கட்டமாக 93,105 மாணவிகளும் பயனடைந்த வகையில் ரூ.100.11 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கீழ் 2023-2024-ம் நிதியாண்டுக்கு ரூ.349.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.60.86 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டதில் 2,11,506 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை இத்திட்டத்துக்கென ரூ.160.97 கோடி பணப்பலனாக மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x