Published : 30 Jul 2023 07:23 AM
Last Updated : 30 Jul 2023 07:23 AM

கல்வி உரிமை சட்டத்தின்படி சேரும் மாணவர்களின் சீருடை, புத்தக கட்டணம் - தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை

சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான சீருடை, பாட புத்தக கட்டணத்தையும் தமிழக அரசு வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி சேர்க்கப்பட்ட தனது மகனுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகளையும் இலவசமாக வழங்க உத்தரவிடக்கோரி அந்த மாணவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் மட்டுமின்றி, சீருடை மற்றும் பள்ளிப் பாட புத்தகங்களுக்கான கட்டணத்தையும் தனியார் பள்ளிகளுக்கு அரசே வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், கல்வி உரிமைச் சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 92,234 வசிப்பிடங்களில் 97.5 சதவீத இடங்களில் அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடக்கப் பள்ளிகளை தொடங்கியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு 2013 - 14-ம் கல்வியாண்டு முதல் பல கோடி ரூபாய் கல்வி கட்டணமாக வழங்கி வருகிறது. 2020-21-ம் ஆண்டில் மட்டும் 56,687 மாணவர்களுக்கு ரூ.364 கோடி கல்வி கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மற்றும் பாட புத்தகங்களுக்கான செலவு அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வித்தியாசப்படும். இந்த சூழலில் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட் டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமென உத்தரவிட்டு, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை செப்.14-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x