

கடலூர்: என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்கத்துக்காக சேத்தியாதோப்பு பகுதி விளை நிலங்களில் கால்வாய் தோண்டும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது.
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள கத்தாழை, கரி வெட்டி, ஆதனூர், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் என்எல்சி நிறுவன 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26-ம் தேதி இப்பகுதியில் சுரங்க விரிவாக்கத்துக்காக ராட்சத இயந்திரங்களின் மூலம் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. இதில் அந்த விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் சேதமடைந்தன. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே, என்எல்சி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் நேற்று முன்தினம் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே அந்நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்றனர்.
கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸார் மீது கற்கள் வீசப்பட்டன. போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 500 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
28 பேர் கைது: இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அன்புமணி ராமதாஸ் உட்பட 500 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 17 வயதுடைய 2 பேர் கடலூர் கூர் நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 26 பேர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போராட்டத்தால், சேத்தியாதோப்பு பகுதி விளைநிலங்களில் நடந்து வந்த என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணி நேற்று முன்தினம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று 3-வது நாளாக இப்பணி தொடர்ந்து நடைபெற்றது. 30-க்கும் மேற்பட்ட ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.