Published : 30 Jul 2023 09:15 AM
Last Updated : 30 Jul 2023 09:15 AM

கலாம் கனவை நிறைவேற்றும் பிரதமர்: ராமேசுவரத்தில் அமித் ஷா பெருமிதம்

ராமேசுவரம்: அப்துல் கலாமின் கனவுகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக வந்த அவர் ராமேசுவரத்தில் உள்ள தனியார் அரங்கு ஒன்றில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜெ. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘‘ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் - நினைவுகளுக்கு மரணமில்லை’’ என்ற ஆங்கிலப் பதிப்பை வெளியிட்டார்.

கலாமின் அண்ணன் மகள் டாக்டர் ஏ.பி.ஜெ.எம். நசீமா மரைக்காயர் மற்றும் கலாமின் நண்பரும், விண்வெளி விஞ்ஞானியுமான ஒய்.எஸ்.ராஜன் ஆகியோர் இணைந்து இந்த புத்தகத்தை தமிழில் எழுதியுள்ளனர். ஸ்ரீபிரியா ஸ்ரீநிவாசன் இதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.

விழாவில் அமைச்சர் அமித்ஷா பேசும்போது, கலாம் எழுதிய ‘இந்தியா 2020’ என்ற நூலில் நகர்ப் புறத்தில் மட்டுமல்லாமல் கிராமப் புறங்களில் தொழிற்சாலைகளோடு விவசாயத்தையும் மேம்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கலாமின் இந்த கனவுகளை 2023-ல் பிரதமர் நரேந்திர மோடி அழகாக ஒருங்கிணைத்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், பேரன்கள், ஷேக் தாவுத், ஷேக் சலிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோயிலில் தரிசனம்: முன்னதாக நேற்று அதிகாலை 5.45 மணிக்கு ராமநாத சுவாமி கோயிலுக்கு வந்த அமித் ஷாவுக்கு கோயில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் வரவேற்பு அ‌ளிக்க‌ப்பட்டது. பின்னர் ஸ்படிக லிங்க பூஜையில் கலந்துகொண்ட அவர், சுவாமி, அம்பாள் சந்நிதிகளில் தரிசனம் செய்தார். கோயிலில் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தைப் பார்வையிட்டார்.

இது குறித்து அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், ‘ராமேசுவரம் கோயிலில் தரிசனம் செய்ததை பாக்கியமாக கருதுகிறேன். இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கும், தேசத்தின் செழிப்புக்கும் பிரார்த்தனை செய்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கலாம் வீட்டில்: பிற்பகலில், கலாமின் வீட்டுக்குச் சென்ற அமித் ஷா, அவரது உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், அங்குள்ள கலாம் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அதன் பின்பு, பாம்பன் குந்துக்காலில் விவேகானந்தர் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர், மண்டபம் முகாம் சென்று ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 1.45 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு சென்றார்.

அங்கிருந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் அமித் ஷா டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அமித் ஷாவின் வருகையையொட்டி ராமேசுவரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக, ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 6 முதல் பிற்பகல் 2 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x