Published : 30 Jul 2023 04:00 AM
Last Updated : 30 Jul 2023 04:00 AM
சேலம்: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சுரங்கங்களிலும், விபத்தை தடுக்க ஆய்வுக் குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மைனிங் சர்டிபிகேட் ஹோல்டர்ஸ் அண்டு தொழிலாளர் நலச்சங்க பொதுச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மைனிங் சர்டிபிகேட் ஹோல்டர்ஸ் அண்டு தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் மகாசபைக் கூட்டம் சேலத்தில் இன்று (30-ம் தேதி) நடக்கிறது. இதில், கல்குவாரிகளில் சான்றிதழ் பெற்ற பணியாளர்களை பணியமர்த்துவது, தொழிலாளர்களுக்கு சட்ட, சமூக பாதுகாப்பு மற்றும் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
இது குறித்து, பொதுச் செயலாளர் சண்முகம் கூறியது: தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கி வருகின்றன. சேலத்தில் மட்டும் 237 குவாரிகள் உள்ளன. இக்குவாரிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில் உள்ள குவாரிகளில் மைனிங் சர்டிபிகேட் இல்லாத தொழிலாளர்களை கொண்டு வெடிவைக்கப்படுவதால், விபத்து சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் குவாரிகளில் நடந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் வரை உயிரிழந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் குவாரிகளில் கிணறுபோல தோண்டுவதால் பாறைகள் உருண்டு தொழிலாளர்கள் மீது விழுந்து உயிரிழப்புக்கு காரணமாகிவிடுகிறது.
எனவே, குவாரிகளில் பெஞ்ச் சிஸ்டம் (படி அமைப்பு) முறையில் தோண்ட வேண்டும். மேலும், மைனிங் சான்றிதழ் பெற்றவர்களை மட்டுமே வெடிவைக்கும் பணியில் அமர்த்துவதன் மூலம் குவாரிகளில் ஏற்படும் உயிரிழப்புகளை முழுவதும் கட்டுப்படுத்த முடியும். விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க குவாரிகளில் மைனிங் சான்றிதழ் பெற்ற பணியாளர்களை பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மைனிங் படிப்புக்கும் தகுதி: சுரங்கங்களில் பிஇ மைனிங், டிப்ளமோ மைனிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு, இதர தனியார் நிறுவனங்கள், ஓராண்டு தொழில்பயிற்சி கொடுத்து சான்றிதழ் வழங்க வேண்டும்.
தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பணிக்கு எம்.எஸ்.சி ஜியாலஜி படித்தவர்களை அரசுத் தேர்வு மூலம் பணியமர்த்துவதைப் போல பி.இ மைனிங் படித்தவர்களுக்கும் தேர்வு எழுத தகுதியளித்து பணியமர்த்த பரிந்துரைக்க வேண்டும்.
எம்.எம்.ஆர் 1961 விதியின் படி அனைத்து சுரங்கங்களிலும் மைனிங் சர்டிபிகேட் ஹோல்டர்களை பணியமர்த்த வேண்டும். அவ்வாறு பணியமர்த்தாத சுரங்க உரிமையாளர்கள் மீது சுரங்கச் சட்டம் 1952 மற்றும் எம்எம்ஆர் 1961 விதிகளின்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரங்க தொழிலாளர்களான, எச்இஎம்எம் ஆபரேட்டர்கள், ஓட்டுநர்கள், டிரில்லர்கள், மஸ்தூர் தொழிலாளிகள் அனைவருக்கும் அவர்களின் மனரீதியான அழுத்தம், உடல் உழைப்பை கருத்தில் கொண்டு 8 மணி நேரம் வேலை நேரம் நிர்ணயிக்க வேண்டும். அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இன்சூரன்ஸ் அளித்து பாதுகாப்பு வழங்க வேண்டும். சுரங்கத்தில் வேலை செய்கின்ற அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
நலவாரியம் தேவை: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் இயங்கி வருவதுபோல, சுரங்கத் தொழிலாளர்களுக்கும் தனி நலவாரியம் அமைத்து அதன்மூலம் 60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும். கல்குவாரி உரிமையாளர்களும், வெடிமருந்து விற்பனையாளர்களும் ஒப்பந்த முறையில் வெடி வைக்கக் கூடாது.
அதேபோல, சார்ட் ஃபயர் சான்றிதழ் பெற்றவர்களை வைத்து வெடிக்காமல் எம்.எம்.ஆர், பிளாஸ்டர், மேட், ஃபோர் மேன் சான்றிதழ் பெற்றவர்களை வைத்து மட்டுமே வெடிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சுரங்கங்களிலும், விபத்தை தடுக்க ஆய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT