Published : 30 Jul 2023 02:36 PM
Last Updated : 30 Jul 2023 02:36 PM
கோவை: தமிழக அரசு தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து பதிபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு பதிப்பக உரிமையாளரும், எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக யுடியூப் சேனல் ஒன்றில் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக அறிகிறேன். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக அரசின் தவறுகளை, அடக்குமுறைகளை யாரும் பேசவோ, எழுதவோ கூடாது என்பதற்காக, திமுக அரசை எதிர்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடுபவர்களை தமிழக அரசு கைது செய்து வருகிறது. சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடுவதற்கெல்லாம் கைது செய்யப்பட வேண்டுமெனில், திமுகவினரில் பெரும்பாலானோர் நிரந்தரமாக சிறையில்தான் இருக்க வேண்டும்.
கணித நிபுணரான பத்ரி சேஷாத்ரி, கணிதம் தொடர்பாக தமிழில் பல புத்தகங்களை எழுதி இருப்பவர். சமூகத்தை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக துணிச்சலுடன் தனது கருத்துகளை தெரிவித்து வருபவர். திமுகவுக்கு மாற்றான சிந்தனைகளையும், தமிழக அரசின் தவறுகளையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் என்பதால், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இது ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச நடவடிக்கை. அடக்குமுறை மூலம் அரசுக்கு எதிரான குரலை ஒடுக்கிவிடலாம் என்று நினைப்பது நடக்கவே நடக்காது. இது தொழில்நுட்ப யுகம். பொய்களை சொல்லி மக்களை இனி ஏமாற்ற முடியாது. எனவே, பாசிச நடவடிக்கைகளை கைவிட்டு பத்ரி சேஷாத்ரியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT