Published : 13 Nov 2017 01:28 PM
Last Updated : 13 Nov 2017 01:28 PM

சனிக்கிழமை இரவுகளும் சாலைப் பயண அச்சங்களும்: பாமக நிறுவனர் ராமதாஸின் ஃபேஸ்புக் பதிவு

சென்னை கதீட்ரல் சாலை ஆர்.கே, சாலை சந்திப்பு அகர்வால் மருத்துவமனை அருகே தொழில் அதிபரின் மகன் போதையில் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலியானார். இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு 'சனிக்கிழமை இரவுகளும், சாலைப் பயண அச்சங்களும்' என்று தலைப்பிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது ஃபேஸ்புக்கில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மது விருந்துக் கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும். கல்லூரி மாணவர் குடிபோதையில் ஓட்டிய மகிழுந்து மோதி உயிரிழந்த தானி ஓட்டுனரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் முகநூல் பதிவின் முழு விவரம்:

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சாலையில் தானி (ஆட்டோக்கள்)  நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தானிகள் மீது குடிபோதையில் கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த  மகிழுந்து மோதியதில் பல தானிகள் சேதமடைந்தன. 6 தானிகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. ஒரு தானி ஓட்டுனர் உயிரிழந்துள்ளனர். 5 ஓட்டுனர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கொடிய விபத்துக்குக் காரணமானவர்கள் சென்னையில் உள்ள கட்டுப்பாடு மிக்க கல்லூரியின் மாணவர்கள் ஆவர். அக்கல்லூரியின் மாணவர்களே குடித்து விட்டு போதையில் வாகனங்களை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்தியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

சென்னையில் இப்போது வார இறுதி கொண்டாட்டங்கள் என்ற புதியக் கலாச்சாரம் உருவாகி வருகிறது. சனிக்கிழமை இரவுகளில்  நட்சத்திர விடுதிகளில் மது அருந்தி கூத்தடிப்பதும், பின்னர் அதே போதையில்  வாகனங்களை ஓட்டி சாலையோரம் வசிக்கும் மக்கள் மீதும், தானிகள் மீதும் மோதி உயிரிழப்புகளை ஏற்படுத்துவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரின் புதல்வர் அவரது நண்பருடன் மது அருந்தி விட்டு வேகமாக மகிழுந்தை ஓட்டி வந்து இதே இராதாகிருஷ்ணன் நகர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த  தானிகள் மீது மோதியதில் ஒரு தானி ஓட்டுனர் கொல்லப்பட்டார்.

மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.  கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் கிழக்கு கடற்கரைச்சாலையில் ஒரு பெண் மது போதையில் வேகமாக மகிழுந்தை ஓட்டி வந்து சாலையோரம் நின்ற  கூலித் தொழிலாளி மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.

இத்தகைய விபத்துக்களால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவுகளில் சாலைகளில் பயணம் செய்யவே அச்சமாக உள்ளது.  பணக்காரக் குடும்பத்தினர் தங்களின் மகிழ்ச்சிக்காகவும், உற்சாகத்திற்காகவும்  மது அருந்தி விட்டு சாலையோரம் வசிக்கும் அப்பாவிகளையும், தானி ஓட்டுனர்களையும், சாலையில் பயணிக்கும் ஏழைகளையும் மகிழுந்தை மோதி கொலை செய்வதை இனியும் அனுமதிக்கக்கூடாது.

சாதாரண சாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஏழைகளை துரத்திப் பிடித்து தண்டிக்கும் காவல்துறை, இத்தகைய குற்றங்களைத் தடுக்கவோ, அதில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ முன்வருவதில்லை.

அரசு மதுக்கடைகளின் விற்பனை நேரம் இரவு 10 மணி வரை என்று  நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர விடுதிகளில்  நள்ளிரவு 12.00 மணி வரை மது விற்பனை நடைபெறுகிறது. பல நட்சத்திர விடுதிகளில்  காவல்துறை உதவியுடன்  விடிய, விடிய மது ஆறாக ஓட அனுமதிக்கப்படுகிறது.  வசதி படைத்தவர்களின் கொண்டாட்டங்களுக்காக அப்பாவிகள் உயிரிழப்பது தொடர்கதையாவதை அனுமதிக்கக்கூடாது.

எனவே, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மது விருந்துக் கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும். கல்லூரி மாணவர் குடிபோதையில் ஓட்டிய மகிழுந்து மோதி உயிரிழந்த தானி ஓட்டுனரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அதை அந்த விபத்தை ஏற்படுத்தியவரின் குடும்பத்திடமிருந்து  வசூலித்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x