Published : 30 Jul 2023 02:57 PM
Last Updated : 30 Jul 2023 02:57 PM

ஆக.1 முதல் தேங்காய் உடைக்கும் போராட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

திருப்பூர்: தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 1-ம் தேதி முதல் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி கூட்டம், திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அந்த அமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கமாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம், துணைத் தலைவர் கே.பி.சண்முக சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவரும், ஏர் முனை இளைஞர் அணியின் மாநிலத் தலைவருமான என்.எஸ்.பி. வெற்றி செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேங்காய் விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்துவரும் சூழலில், தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்களில் தென்னை மரங்கள் வைத்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கூடிய வகையில்,

தமிழ்நாடு அரசு எந்த ஒரு நிபந்தனையும் இன்றி விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை ரூ.140-ஆக உயர்த்தி தர வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் வழங்குவதற்கு பதிலாக, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்.

35 ஆண்டுகளாக கள்ளுக்கு உள்ள தடையை நீக்கி, கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 1-ம் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 31 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 31 கிராமங்களிலும் நாள்தோறும் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும்.

இப்பிரச்சினையில் தமிழ்நாடு அரசு தலையிடா விட்டால், ஏர் முனை இளைஞர் அணி மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x