

சென்னை: சென்னை கொரட்டூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் திடீர் அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொரட்டூர் காவல் நிலையம் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
3 பிளாக்குகள் 9 தளங்களில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால், அடுக்குமாடி குடியிருப்பு அதிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், குடியிருப்பு வாசிகள் அவசர அவசரமாக குழந்தைகள் மற்றும் வீட்டில் இருந்து முதியோர்களை அழைத்துக்கொண்டு அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேறி சாலையில் திரண்டனர்.
மேலும், ஒலி பெருக்கி மூலமாகவும் குடியிருப்புவாசிகளுக்கு கீழே இறங்கி வர சொல்லியும் அறிவித்தனர். சுமார்500-க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளுடன் சாலையில் திரண்டு நின்றனர். இதுகுறித்து போலீஸாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர், வானிலை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு நில அதிர்வு ஏற்பட்டதா என்பது குறித்து கேட்டறிந்தனர். இந்த நிலையில், நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும், குடியிருப்புவாசிகள் உள்ளே வீட்டினுள் செல்ல பயந்து, பல மணி நேரம் கழித்து அதிகாலையில்தான் தங்களது வீட்டுக்குள் சென்றனர்.
இது குறித்து குடியிருப்புவாசிகள், ‘நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை என போலீஸார் கூறுகின்றனர். அப்படியென்றால், கட்டிடத்தில் ஏன் அதிர்வுஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணைநடத்தி, காரணத்தை கண்டறிந்து வீட்டு வசதி வாரியம் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றனர். நள்ளிரவில் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் அதிர்வால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.