

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அதிக ஒலி எழுப்பிய மற்றும் பாரம் ஏற்றிய 22 வாகனங்களுக்கு ரூ.2.91 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம், சென்னை தெற்கு சரக இணை ஆணையர் முத்து ஆகியோர் உத்தரவின்படி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் மோட்டர் வாகன ஆய்வாளர் கா.பன்னீர் செல்வம் காஞ்சிபுரம் கீழ்அம்பி, பொன்னேரி கரை, வெள்ளை கேட் ஆகிய இடங்களில் தணிக்கை செய்து அவ்வழியே வந்த 3 அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள்,
19 அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் மற்றும் தார்பாலின் போர்த்தப்படாத வாகனங்கள் என மொத்தம் 22 வாகனங்கள் பிடிக்கப்பட்டு ரூ.2 லட்சத்து 91 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அதிக ஒலி எழுப்பும் பைப் பாகங்களை அந்தந்த வாகன ஓட்டுநர்களை வைத்து கழற்றி எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
மேலும் இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர் செல்வம் கூறும்போது, “ஒலி மாசு அதிகமாக இருந்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்கள் 80 டெசிபலுக்கு மேல் ஒலிமாசு இருக்கும்போது அது பொது மக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். விபத்துகள் ஏற்படவும் காரணமாக அமையும்.
எனவே ஒவ்வொரு ஓட்டுநரும் தம்கடமையை உணர்ந்து அதிக ஒலிஎழுப்பும் அல்லது கூடுதல் ஹாரன்கள் பொருத்தாமலும், அதிக பாரம்ஏற்றாமலும் வாகனத்தை இயக்கி காஞ்சிபுரம் பகுதியில் விபத்தை தடுக்க வேண்டும்” என்றார்.