

சென்னை: நெய்வேலி பிரச்சினை தொடர்பாக விவசாயிகள் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை கூட்டணி கட்சிகளுடனும், விவசாயிகளுடனும் கலந்தாலோசிக்காமல் தமிழக அரசு அமல்படுத்தியது. இந்த சட்டத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது என ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. என்எல்சி நிறுவனம் விளை நிலங்களை அபகரிக்க களமிறங்கியிருப்பது கண்டிக்கத்தது.
பயிர்களை ஏன் அழித்தீர்கள்?, 2 மாதம் காத்திருக்க முடியாதா?, என உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், அவரது கருத்தையும் அவமதிக்கும் வகையில் இன்று மீண்டும் கனரக வாகனங்கள் வயல்வெளிகளில் இறக்கப்பட்டுள்ளன.
சட்டப்படி எந்த திட்டத்துக்காக அரசு நிலத்தை கையகப்படுத்துகிறதோ, 5 ஆண்டுக்குள் அந்த நிலத்தைப் பயன்படுத்த வேண்டும். அதன்பிறகும் தரிசாக இருக்குமேயானால் அந்த நிலத்தைமீண்டும் நில உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். எனவேநிலங்களை கையகப்படுத்துவதை இனியும் அனுமதிக்க முடியாது.
இவ்விவகாரத்தில் விவசாயிகளையும், காவல்துறையையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசைக் கண்டித்து, ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னையில் காந்தியவழியில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். எங்களுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில் விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் வி.கே.வி.துரைசாமி, சென்னை மண்டலத் தலைவர் சைதை சிவா பங்கேற்றனர்.