

தற்போது நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகரத் தொடங்கிவிட்டது, எனவே இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் இருந்து சென்னைக்கு மழை கிடைப்பது இன்றுதான் கடைசி. என வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "தற்போது நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் இருந்து சென்னைக்கு மழை கிடைப்பது இன்றே கடைசி. ஏனெனில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகரத் தொடங்கிவிட்டது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்வதன் காரணமாக, ராமநாதபுரம் பகுதியில் மழை இருந்தது. இன்று இதேசூழல் இருப்பதால், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை இருக்கும்.
சென்னையில் இன்று இரவு முழுவதும் அவ்வப்போது மழை இடைவெளிவிட்டு பெய்யும். ஒரு சிலநேரங்களில், ஒருசில பகுதிகளில் மட்டும் கனமழையும் பெய்யக்கூடும்.
குளிர்ச்சியான நாள்:
இந்த ஆண்டிலேயே இன்றுதான் மிகவும் குளிர்ச்சியான நாளாக இருக்க வாய்ப்புள்ளது. தற்போது வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்றளவிலேயே இருக்கிறது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.