

தூத்துக்குடி அனல்மின் நிலைய முதலாவது யூனிட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக, 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் தினம் 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்டும் வெயில்
கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் மதியம் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் மக்கள் புழுக்கத்தால், அவதிப்பட்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தல் நேரத்தில் ஏற்படும் மின்வெட்டு ஆளும்கட்சியினரை கலக்கமடையச் செய்துள்ளது.
’சீரான மின் விநியோகம் செய்ய வசதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அனல்மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி முழு அளவில் இருக்க வேண்டும்’ என அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் இரவு, பகலாக தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி அனல்மின் நிலைய முதல் யூனிட்டில் வியாழக்கிழமை அதிகாலை திடீர் பழுது ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய அனல்மின் நிலையமான தூத்துக்குடியில் தலா, 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இவை மூலம் சராசரியாக 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பழுதால் பாதிப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன் வரை இந்த அனல்மின் நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வந்தது. தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக பழுது ஏற்படுவது தடுக்கப்பட்டது. இந்நிலையில், அனல்மின் நிலைய முதல் யூனிட்டில் கொதிகலனில் வியாழக்கிழமை அதிகாலை 2.52 மணிக்கு திடீரென துளை விழுந்தது.
இதனால், இந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், 210 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அனல்மின் நிலைய தலைமை பொறியாளர் எஸ். தங்கராஜ் கூறுகையில், “முதல் யூனிட்டில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரைவில் கோளாறு சரி செய்யப்படும். மற்ற நான்கு யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி முழு அளவில் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை மதியம் நிலவரப்படி மின் உற்பத்தி சராசரியாக 800 மெகாவாட் அளவுக்கு இருந்தது” என்றார் அவர்.