

சென்னை பாரிமுனையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பல முக்கிய ஆவணங்கள் தீயில் கருகின.
சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே ராஜாஜி சாலையில் 200 ஆண்டு பழமையான கட்டிடம் உள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை உள்ளது. அதே கட்டிடத்தில் வீட்டுக்கடன் பிரிவும் வங்கியின் டேட்டா சென்டரும் செயல்பட்டு வருகின்றன. பணப் பாதுகாப்பு பெட்டகமும் உள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் வங்கியின் 2-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. இதைப் பார்த்ததும் அங்கிருந்த சில ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
தகவல் கிடைத்ததும் 5 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. ஆனால், காற்று பலமாக வீசியதால் 2-வது மாடி முழுவதும் தீ பரவியது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் இருந்து 20-க்கும் அதிகமான வண்டிகளில் சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். லாரிகளிலும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டது. சுமார் இரண்டரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகே தீ கட்டுக்குள் வந்தது.
அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள் தீயில் வெடித்துச் சிதறின. இந்தத் தீ விபத்தால் ராஜாஜி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சனிக்கிழமை என்பதால் குறைவான ஊழியர்களே இருந்துள்ளனர். தீப்பிடித்ததும் எல்லோரும் வெளியேறி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கட்டிடத்தின் அருகே இருந்த பொதுமக்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பழமையான கட்டிடம் என்பதால், தீ விபத்தின் காரணமாக அதன் உறுதித்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். சில முக்கிய ஆவணங்கள் எரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் சூர்யபிரகாஷ் கூறும்போது, ‘‘தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது. எல்லாம் பாதுகாப் பாக இருக்கின்றன. கட்டிடத்தில் மட்டும் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
அபாயகரமான பகுதி
ஸ்டேட் வங்கிக் கட்டிடம், பழமையானது என்பதால் அது இடிந்து விழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியை அபாயகரமான பகுதியாக போலீஸார் அறிவித்துள்ளனர். அந்தக் கட்டிடத்தில் அருகில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். யாரும் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.