Published : 29 Jul 2023 06:36 PM
Last Updated : 29 Jul 2023 06:36 PM
சென்னை: "பாவ யாத்திரை" என்று புலம்பும் அளவுக்கு ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம், முதல்வர் ஸ்டாலினை கலங்கடித்துள்ளததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த "என் மண், என் மக்கள்" நடைபயணம், தமிழக முதல்வரை, பாவ யாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், திமுக முதல் குடும்பத்தின் ‘நிதி’களைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது. தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக்கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால், அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும்.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது. மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர். மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன.
2009 ஆம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார்.
பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாவயாத்திரை செய்து ராமேஸ்வரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
முன்னதாக, “பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல, பாவ யாத்திரை” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதன் விவரம்: “பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல... பாவ யாத்திரை!” - அமித் ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT