Published : 29 Jul 2023 05:04 PM
Last Updated : 29 Jul 2023 05:04 PM

107 வயதான மூத்த ஓய்வூதியர் - நேரில் பாராட்டு தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

107 வயது நிறைவடைந்த ஓய்வூதியரை நேரில் சென்று பாராட்டு தெரிவித்த அமைச்சர்.

நாகை: 107 வயது நிறைவடைந்த ஓய்வூதியர் கோபாலகிருஷ்ணனை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார்.

கோபாலகிருஷ்ணன் என்பவர் நாகப்பட்டினம் மாவட்டக் கருவூலம் மூலமாக 01-05-1972 முதல் குடிமை ஓய்வூதியம் பெற்று வருகிறார். அவரது ஓய்வூதிய கொடுவை ஆணை எண். A-69690. ஓய்வூதியர் பிறந்த தேதி 26.10.1916. இவர் தற்போது 107 வயதை நிறைவு செய்துள்ளார். தமிழகத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களில் கோபாலகிருஷ்ணன் தான் வயதில் மூத்தவர் ஆவார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரு வாரிசுகள் உள்ளனர்.

இவர் இரண்டாம் உலகப் போர் (1939 – 1945) நடைபெற்ற காலத்தில் ராணுவத்தில் I.E.M.E படை பிரிவில் சேர்ந்து மோட்டார் மெக்கானிக் மற்றும் கனரக வாகன ஓட்டுநராக Lans Nayak பதவி நிலையில் ஐந்து வருடங்கள் பணிப்புரிந்துள்ளார். அப்போது பர்மா, மணிப்பூர் போன்ற இடங்களில் நடைபெற்ற போரில் பங்கெடுத்துள்ளார். அன்றைய காலக்கட்டத்தில் ஐந்து பதக்கங்களையும் பெற்றுள்ளார். அதன் பிறகு ஒன்றிய அரசுப்பணியில் சில காலம் சுங்கத்துறையில் பணியாற்றி உள்ளார். அதன் பிறகு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து நாகப்பட்டினம், காவல் நிலையம் – திட்டச்சேரியில் காவலராக (Police Constable) பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

இவரை கவுரவிக்கும் விதமாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கருவூல கணக்குத்துறை ஆணையர் விஜயேந்திர பாண்டியன், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ரஞ்சித் சிங் ஆகியோர், கோபாலகிருஷ்ணன் வசித்து வரும் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து ஓய்வூதியர்களுக்கான ஆண்டு நேர்காணலை மேற்கொண்டதுடன் நேர்காணல் சான்றிதழை அளித்து கௌரவித்தார்கள்.

மேலும், தமிழகம் முழுவதும் 100 வயது நிறைவு செய்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களை கவுரவிக்கும் விதமாக அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களும் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்து கவுரவிக்க கருவூல கணக்குத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x