

திருவண்ணாமலை: ஆரணி காந்தி சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றாவிட்டால் மக்களின் தொடர் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் காந்தி சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்குகிறது. ஆரணி நகரின் மைய பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைக்கு ஆரணி நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மதுபிரியர்களின் வருகை அதிகளவில் உள்ளன.
மேலும், பல்வேறு தேவைகளுக்கு கிராமப்புற பகுதியில் இருந்து ஆரணிக்கு வருபவர்களும் டாஸ்மாக் கடைக்கு வந்து செல்வது வாடிக்கை. உற்சாக பானத்தை வாங்குவதற்காக, கடை திறப்பதற்கு முன்பாகவே வந்து, கடை திறக்கும் வரை அவர்கள் காத்திருப்பது வாடிக்கையாக உள்ளது. டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதும் மதுபானங்களை வாங்கி அங்கேயே அருந்துகின்றனர்.
அப்போது அவர்கள், நிதானம் இழந்து, தாங்கள் என்ன செய்கிறோம் என தெரியாமல் செயல்படுகின்றனர். குடிமகன்களின் அத்துமீறலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். டாஸ்மாக் மதுக்கடையை சுற்றியுள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் அவதிப்படுகின்றனர்.
மேலும், கூட்டமாக கூடி, ரகளையில் ஈடுபடும் மதுபிரியர்களால் காந்தி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சாலையின் குறுக்கே திடீரென தள்ளாடியவாறு வருவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்கின்றனர். காந்தி சாலை வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் மற்றும் பெண்கள் நிலை பரிதாபமாக உள்ளது. மாணவிகள், பெண்கள், வியாபாரிகள், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டத்தில் பங்கேற்ற ஆரணி சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசும்போது, “ஆரணி காந்தி சாலையில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் தெரிவித்தேன். அவரும், தமிழகத்தில் கொள்கை அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆரணி காந்தி சாலையில்இந்த பட்டியலில் ஆரணி காந்தி சாலையில் உள்ள மதுக்கடையும் இடம்பெறும், விரைவாக அகற்றப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், 500 கடைகளின் பட்டியலில், ஆரணி காந்தி சாலையில் உள்ள மதுக்கடையின் பெயர் இடம்பெறவில்லை. மக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மதுக்கடையை அகற்ற ஆட்சியர் பா.முருகேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதேபோல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சமூக பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் அ.ராஜன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் கோட்டாட்சியர் தனலட்சுமியிடம் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்...
வலுக்கும் எதிர்ப்புஆரணி காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை சூழ்ந்துள்ள மதுபிரியர்கள். பிரியர்கள்மாணவிகள், பெண்கள் அவதி.. போக்குவரத்து பாதிப்பு..தள்ளாடும்இந்நிலையில் சமூக ஆர்வலர் அ.ராஜனின் மனுவுக்கு பதில் அளித்துள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர், “ஆரணி நகரில் உள்ள மதுக்கடை, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழிகாட்டி நெறிமுறைகளின்படி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.
மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மாற்று இடம் தேர்வு செய்யப்படும் பட்சத்தில், விதிமுறைகளின்படி டாஸ்மாக் மதுக்கடை இடமாற்றம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட டாஸ்மாக் மேலாளரின் தகவலுக்கு சமூக ஆர்வலர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆரணி சட்டப்பேரவை உறுப்பினர் மூலமாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மாற்று இடம் கிடைத்ததும் கடை அகற்றப்பட்டுவிடும் என ஒரே பதிலை கூறி வருகின்றனர். இப்போதும் கூட, மாற்று இடம் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் என குறிப்பிட்டுள்ளனர்.
டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கூடாது என்பதில் நிர்வாகம் உறுதியாக உள்ளது. கடையை அகற்ற வேண்டும் என்ற மக்களின் உணர்வை நீர்த்துப் போக செய்வதில் தெளிவாக உள்ளனர். டாஸ்மாக் கடையை அகற்ற துரித நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களின் தொடர் போராட்டத்தை சந்திக்க நேரிடும்” என எச்சரித்துள்ளனர்.