Published : 29 Jul 2023 01:59 PM
Last Updated : 29 Jul 2023 01:59 PM
சென்னை: கிருஷ்ணகிரி பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், பழையபேட்டை நகரம், நேதாஜி ரோடு, போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் இன்று (29-7-2023) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை அனுப்பிவைத்துள்ளேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் கூறியுள்ளார்.
உயிரிழப்பு 9 ஆக அதிகரிப்பு: கிருஷ்ணகிரி பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. பழைய பேட்டை நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார். அந்த கடைக்கு அருகில் ராஜேஸ்வரி என்பவர் உணவகம் நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து, அந்த தீயானது பட்டாசு கடைக்கு பரவியதாக முதற் கட்ட தகவல் தெரிவித்தன.
இந்த விபத்தில் ராஜேஸ்வரி (55), பட்டாசு கடைக்காரர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ருத்திகா, மகன் ருதீஷ் உள்பட 9 பேர் பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர். பட்டாசு கடையில் இருந்தவர்கள் உடல் தூக்கி வீசப்பட்டதால் அப்பகுதியில் உடல் பாகங்கள் சிதறி விழுந்து காண்போர் மனங்களை உலுக்குவதாக அமைந்தது.
இந்நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு, எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். திமுக எம்எல்ஏ மதியழகன், அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் ஆகியோரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
நிகழ்விடத்தை ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் கூறுகையில், "உணவகத்தில் சிலிண்டர் வெடித்து பட்டாசு கடைக்கும் தீ பரவியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
விபந்து நடத்த இடத்துக்கு அருகில் இருந்த பல வீடுகளில் கண்ணாடி உடைந்துள்ளது. விபத்து நடந்தபோது சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றோர், நடந்து சென்றோர் மீதும் கட்டிட இடிபாடுகள் சிதறி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT