

சேலம்: தமிழக ஆளுநருக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில், பள்ளி மாணவரிடம் கையெழுத்து பெற முற்படுவது, இதுபோன்று கையெழுத்து பெறுவது சரியா என்று ஒருவர் கேள்வி எழுப்பிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மதிமுக சார்பில் மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.இதையொட்டி, சேலம் ரெட்டிப்பட்டி பகுதியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில், அக்கட்சியின் மாநகர் மாவட்ட அவைத் தலைவர் லிபியா சந்திரசேகர், கலைத் துறை துணைச் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
அப்போது பள்ளி மாணவர் ஒருவர் கையெழுத்திட முற்படும்போது, ஒருவர் அதை தடுத்து, மாணவரிடம் கையெழுத்து பெறுவது சரியா என்று கேள்வி எழுப்பிய வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், பள்ளி அடையாள அட்டை அணிந்த மாணவர் ஒருவர் கையெழுத்திட முனைந்தபோது, அவரைத் தடுக்கும் நபர், “தம்பி எந்த வகுப்புபடிக்கிறாய்? எதற்காக கையெழுத்து போடுகிறாய்?” என்று கேட்கிறார். அதற்கு, “10-வது படிக்கிறேன்” என்று பதில் அளித்த மாணவர், கையெழுத்து போடத் தயங்குகிறார். அப்போது, அங்கிருந்த கட்சிக்காரர், மாணவரை கையெழுத்து போடும்படி வலியுறுத்துகிறார்.
மாணவரை தடுத்த நபர், “தம்பி, 18 வயதுக்குப் பின்னரே இதற்கு வர வேண்டும்” என்று கூறவே, அந்த மாணவர் அங்கிருந்து சென்றுவிடுகிறார். பின்னர் அந்த நபர் மதிமுகவினரிடம், “அண்ணா...படிக்கிற குழந்தைகளிடம் எதற்காக கையெழுத்து வாங்குகிறீர்கள்? குழந்தைகளிடம் கூட கையெழுத்து வாங்குவீர்களா? இந்த சிறுவனுக்கு என்ன விவரம் தெரியும்?” என்று தெரிவிக்கிறார்.
இதுகுறித்து மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆனந்தராஜ் கூறும்போது, “சிறுவர்களிடம் கையெழுத்து வாங்குவது தவறு, கையெழுத்து இயக்கம்குறித்து அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு, யாரையும் கட்டாயப்படுத்தாமல் கையெழுத்து வாங்கியுள்ளனர். பள்ளி தேடிச்சென்று, மாணவரிடம் கையெழுத்து வாங்கவில்லை” என்றார்.
புகார் தெரிவிக்கலாம்...: சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகுமார் கூறும்போது, “குழந்தைகளை கொத்தடிமைகளாக நடத்துவது, பணியில் ஈடுபடுத்தி, உழைப்பைச் சுரண்டுவது போன்றவை குற்றமாகும். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களிடம் கையெழுத்து பெறுவது சட்டப்படி செல்லாது. எனவே, பள்ளி மாணவரிடம் கையெழுத்து பெறுவது தவறானது. சிறுவனின் பெற்றோர், தங்கள் மகனை தவறாக வழிநடத்துவதாக போலீஸில் புகார் தெரிவிக்கலாம். சமூகஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம்” என்றார்.
சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “கையெழுத்து இயக்கம் என்பது, நமது கருத்தை அரசுக்கு ஆணித்தரமாக தெரிவிக்கக் கூடிய ஒரு வழிமுறை. ஆனால், விளையாட்டுத்தனம் நிறைந்த சிறுவர்களிடம், சிக்கலான அரசியல் நிலைப்பாடுகள் குறித்த கருத்துகளுக்கு ஆதரவு திரட்டுவது, பொறுப்பற்ற செயலாகும். கட்சித்தலைவர்கள், தங்கள் இயக்கத்தினருக்கு இதுகுறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டியது அவசியம்” என்றனர்.