

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் உலவுகின்றன. பவானிசாகர் வனச் சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத் துறையினர், கடந்த இரு நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் ரோந்து சென்றபோது, குமரத்தூர் பகுதியில் உயிரிழந்த நிலையில் 6 வயதான ஆண் புலி கண்டறியப்பட்டது. இதையடுத்து, புலியின் உடல் உறுப்புகளை, ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனர்.
வனப் பகுதியில் மான், பன்றிகளை வேட்டையாட வைக்கப்படும் இரும்புக் கம்பிகளால் ஆன கண்ணியில் புலி சிக்கியதும், அதிலிருந்து 10 நாட்களாக மீள முடியாத நிலையில் உணவின்றி அதுஉயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கண்ணிகளை வைத்ததாக, சுசில்குட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ், நாச்சிமுத்து, பத்மகுமார், லோகேஷ் பால், தினகரன், சவுந்தர்ராஜன் மற்றும்17 வயது சிறுவன் ஆகியோரை வனத் துறையினர் கைது செய்தனர்.