என்எல்சி சுரங்கத்துக்கு நிலம் கையப்படுத்தும் பிரச்சினைக்கு உரிய தீர்வு: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

என்எல்சி சுரங்கத்துக்கு நிலம் கையப்படுத்தும் பிரச்சினைக்கு உரிய தீர்வு: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
Updated on
2 min read

சென்னை/மதுரை: என்எல்சி சுரங்கப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்கு கால்வாய் வெட்டும் பணியின்போது நெல் பயிர்கள் அழிக்கப்பட்டதைக் கண்டித்து தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்எல்சி விரிவாக்கத்துக்காக நிலங்களை கையகப்படுத்துவதைக் கண்டித்து நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, பாமகவினர் மீது நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை. மண்ணைக் காக்க அறவழியில் நடத்தப்படும் போராட்டத்தை, அடக்குமுறை மூலம் ஒடுக்க அரசும், காவல் துறையும் முயன்றால் அவர்களுக்கு தோல்வியே கிடைக்கும்.

இத்தகைய சீண்டல்களின் மூலம் பாமகவின் போராட்டத்தை அடக்கிவிட முடியாது. தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறிவிட்ட நிலையில், என்எல்சி நிறுவனம் இனி தேவையில்லை. உடனடியாக அந்த நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் கடலூர் மாவட்ட மக்களின் விருப்பமாகும்.

தமிழக அரசு மக்கள் பக்கம் நிற்க வேண்டுமே தவிர, என்எல்சியின் அத்துமீறல்களுக்கு துணை போகக்கூடாது. கைது,தடியடி போன்ற அடக்குமுறைகளால் பாமகவை கட்டுப்படுத்த முடியாது.

வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடவேண்டும். என்எல்சி நிறுவனம் தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து பாமக ஒருபோதும் பின்வாங்காது. இறுதி வெற்றி கிடைக்கும்வரை, அறவழியில் எங்களது போராட்டம் தொடரும்.

மதிமுக பொதுச் செயலாளர்வைகோ: நிலம் எடுப்பு மேற்கொள்ளப்பட்டு 10 ஆண்டுகளாகி விட்டதாக கடலூர் ஆட்சியர் கூறுகிறார். எந்த நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அதற்காக பயன்படுத்தப்படவில்லை. எனவே, அந்த நிலத்தை மீண்டும் நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது கடலூர் ஆட்சியருக்கு தெரியாதா? 10 ஆண்டுகள் பொறுத்த என்எல்சி, நெல் அறுவடை செய்யும் வரை 10 நாட்களுக்கு பொறுத்திருக்காதா? எனவே, பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண வேண்டும். போராட்டத்தின்போது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: அறுவடைக்குத் தயாராக உள்ள நெல்பயிர்களை அழித்ததும், காவல் துறை உதவியுடன் மக்களை மிரட்டி வெளியேறச் செய்ததும் கண்டிக்கத்தக்கது. மேலும், பாமக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தடியடி நடத்தியது விரும்பத்தகாதது. எனினும், நிறுவனத்தையே வெளியேறச் சொல்லும் கோரிக்கை ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வுகாண வேண்டும்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: நெற்பயிர்களை அழித்ததை, தமிழக அரசு வேடிக்கை பார்த்தது ஏமாற்றம் அளிக்கிறது. விவசாயிகளின் நிலங்களை அபகரிக்கும் என்எல்சி நிறுவனத்துக்கு துணைபோகும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும்.

சமக தலைவர் சரத்குமார்: விளை நிலங்களை அழித்து, விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கிய என்எல்சியின் விரிவாக்கப் பணிகளை தடை செய்வதுடன், இதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “என்எல்சி நிறுவனத்துக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தும் விவகாரத்தில், அவசரம் காட்டத்தேவையில்லை. விளை நிலங்களைக் கையகப்படுத்துவது, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல். எனவே, விரிவாக்கப் பணியை உடனே நிறுத்த வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in