

கோவை: கோவை மாநகரில் தானியங்கி வேக அளவீட்டுக் கருவி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. முதற்கட்டமாக அவிநாசி சாலை உட்பட 3 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
கோவை மாநகரில் அவிநாசி சாலை வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாகும். இச்சாலையில் அண்ணாசிலை சந்திப்பில் இருந்து ஜி.கே.என்.எம் மருத்துவமனை சந்திப்பு வரை உள்ள சாலை இடைப்பட்ட சந்திப்புகள் இல்லாத நீண்ட சாலையாகும். இச்சாலையில் வாகன ஓட்டிகள் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், சில வாகன ஓட்டிகள் 70 கிமீ., வேகத்தில் வாகனத்தை இயக்குவதாக காவல் துறைக்கு புகார்கள் வந்தன.
அதேபோல், சரவணம்பட்டி அம்மன் கோயில் பேருந்து நிறுத்தம், பாலக்காடு சாலையில் பி.கே.புதூர் பகுதியிலும் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதை தடுக்கும் வகையில், மேற்கண்ட இடங்களில் ‘ஸ்பீடு ரேடார் கன்’ எனப்படும் அதிவேக வாகன ஓட்டிகளை கண்டறிய உதவும் தானியங்கி வேக அளவீட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் அருகே வாகனங்களின் எண்களை துல்லியமாக படம் பிடிக்கும் நவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
தானியங்கி வேக அளவீட்டுக் கருவியின் தொடக்க விழா அவிநாசி சாலை, ஜி.கே.என்.எம் மருத்துவமனை சந்திப்புப் பகுதிகளில் நேற்று நடந்தது. போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் முன்னிலை வகித்தார். மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் பங்கேற்று இவற்றை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த தானியங்கி வேக அளவீட்டுக் கருவி மூலம் 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்படும். இதற்கான அபராத ஆவணம், வாகன உரிமையாளர்களுக்கு இ-சலான் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தானியங்கி வேக அளவீட்டுக் கருவியுடன் கண்காணிப்புக் கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளதால், ஒரே நேரத்தில் 32 வாகனங்களை கண்காணிக்க முடியும். வாகனங்களின் எண்ணை இரவு நேரங்களிலும் துல்லியமாக பதிவு செய்யும். எனவே, மாநகரில் 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வாகனங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.