Published : 24 Nov 2017 01:48 PM
Last Updated : 24 Nov 2017 01:48 PM

சென்னை ரெட்ஹில்ஸில் கட்டிமுடிக்காத மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து விபத்து: 3 பேர் பலி; இருவர் காயம்

தடுப்புகளை அகற்றிய படக்குழுவினரால் விபத்து

சென்னை செங்குன்றம் அருகே கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (65). இவர் தனது மனைவி நவநீதம்(58), மகள் பவித்ரா (32) மற்றும் அவரது கணவர் ஜயப்பன் (42) ஆகியோருடன் மீஞ்சூரில் உள்ள உறவினரின் நிச்சயதார்த்த விழாவுக்கு காரில் சென்றிருந்தார். ஓட்டுநர் கந்தவேல்(28) காரை ஓட்டினார். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

 

மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை போடப்பட்டு வரும் வெளிவட்டச் சாலை யில் கார் சென்றது. இந்த சாலையில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே கட்டி முடிக்கப்படாத பாலம் ஒன்று உள்ளது. இரவு 10.30 மணியளவில் இந்த வழியாக வந்த அவர்களின் கார், தவறுதலாக அந்த பாலத்தின் மீது ஏறியுள்ளது. குறிப்பிட்ட தூரம் வரை பாலத்தில் சென்ற பிறகு, சுமார் 40 மீட்டர் உயரத்தில் இருந்து கார் கீழே விழுந்தது. இதில் பழனி, நவநீதம், பவித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஐயப்பன் மற்றும் ஓட்டுநர் கந்த வேல் ஆகியோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும், சோழவரம் போலீஸார் விரைந்து வந்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கார் கீழே விழுந்த இடத்தில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. இதனால் கார் விழுந்த வேகத்தில் காயமடைந்து மயக்கத்தில் ஆழ்ந்த பழனி உட்பட 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஐயப்பனும், கந்தவேலும் கதவை திறந்து வெளியே வந்ததால் உயிர் பிழைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து சோழவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த வெளிவட்டச் சாலை, எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகங்களுக்கு வரும் கனரக வாகனங்கள் செல்வதற்காக மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை போடப்பட்டு வருகிறது. இதில் வண்டலூர் முதல் நெமிலிச்சேரி வரையிலான சாலைப்பணி முடிவடைந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் நெமிலிச்சேரி காந்தி நகர், விபத்து நடந்த செங்குன்றம் பகுதி, எடப்பாளையம் ஆகிய 3 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப்பகுதியில் வாகனங்கள் செல்லாமல் இருக்க கான்கிரீட் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செங்குன்றம் பகுதியில் பாதியில் முடிக்கப்பட்டுள்ள பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது கட்டி முடிக்கப்பட்டாத பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்பு மற்றும் பேரிகார்டுகளை படக்குழுவினர் அகற்றியுள்ளனர். ஷூட்டிங் முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் தடுப்புகளை வைக்கவில்லை. இதனால் கட்டி முடிக்கப்பட்ட பாலம் என்று கருதி, அதன் மீது டிரைவர் காரை ஓட்டியுள்ளார். இதனால்தான் விபத்து நடந்துள்ளது. 

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘அங்கே படப்பிடிப்பு நடத்த எங்களிடம் இருந்து அனுமதி எதுவும் வாங்கவில்லை. விபத்து நடந்த பகுதியில் ஷூட்டிங் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x