அரூரில் வீடு வழங்கும் திட்டத்துக்கு பணம் கேட்டதாக புகார் - மாற்றுத் திறனாளி தற்கொலை; ஊராட்சி தலைவரை கண்டித்து மறியல்

சாலைமறியலில் ஈடுபட்ட பழனிவேலின் உறவினர்களால் அரூர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலைமறியலில் ஈடுபட்ட பழனிவேலின் உறவினர்களால் அரூர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Updated on
2 min read

அரூர்: அரூர் அருகே மாற்றுத்திறனாளி தற்கொலைக்கு காரணமான ஊராட்சித் தலைவரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரூரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கொக்கராப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பழைய கொக் கராப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (39). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சுகுணா. 2 குழந்தைகள் உள்ளனர். இவர் களுக்கு சொந்தமான வீடு பழுதடைந்த நிலையில், மாற்று இடம் இல்லாமல் இடிந்த வீட்டிலேயே கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், தங்களுக்கு வீடு வழங்கக் கோரி ஊராட்சித் தலைவர் மணிமாறனிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், ஊராட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனிடையே, கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பழனிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் அருகே உள்ள ரேஷன் கடை பகுதியில் தங்கியிருந்தனர். இதையறிந்த கிராம நிர்வாக அலுவலர் அருண் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

குடியிருக்க வீடு இல்லாமல் தனது குடும்பத்தினர் அவதிப்படுவதைக் கண்டு மனவேதனையில் இருந்த பழனிவேல் நேற்று முன்தினம், பழுதடைந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோபிநாதம்பட்டி போலீஸில் சுகுணா புகார் அளித் தார். புகாரில் கூறியிருப்பதாவது:

வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், தங்களுக்கு வீடு வழங்கக் கோரி ஊராட்சித் தலைவர் மணிமாறனிடம் முறையிட்டோம். ஆனால், அவர் பணம் கொடுத்தால் தான் அரசு திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய முடியும் என கூறினார். இதனால் மன உளைச்சலில் இருந்த எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே, தற்கொலைக்கு காரணமான ஊராட்சித் தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

மாற்றுத் திறனாளி பழனிவேல்.
மாற்றுத் திறனாளி பழனிவேல்.

இதன்பேரில், வழக்குப் பதிவு செய்த கோபிநாதம்பட்டி போலீஸார், பழனிவேல் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று பழனிவேலின் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் அரூரில் ஒன்று திரண்டனர். பழனிவேல் தற்கொலைக்கு காரணமான ஊராட்சித் தலைவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அரூர் ரவுண்டானா 4 ரோடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், தருமபுரி- சேலம்-திருப்பத்தூர் சாலைகளில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே ஊராட்சித் தலைவரை பதவிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி100-க்கும் மேற்பட்டவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், சர்வோத்தமன் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in