Published : 29 Jul 2023 06:06 AM
Last Updated : 29 Jul 2023 06:06 AM
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு உயர், மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் உட்பட 38 சங்கங்கள் உள்ளன.
இந்த கூட்டமைப்பின் சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை நிராகரிக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துசலுகைகளையும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவொளியை கடந்த26-ம்தேதி சந்தித்து மனு அளித்தனர்.
முன்னதாக இக்கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்து இருந்தனர். அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் மாயவன் கூறும்போது, “திமுக ஆட்சிக்கு வந்து2 ஆண்டுகளாகியும், தேர்தல்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. பள்ளிக்கல்வி துறையில் எல்லாவற்றிலும் பகுதிநேர ஆசிரியர்களையே அமர்த்தி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பி.பேட்ரிக் ரெய்மெண்ட், எம்.ரவிச்சந்திரன், ஆர்.பெருமாள்சாமி, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக பொதுச்செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கோரிக்கைகள் தொடர்பாக அரசின் செயல்பாட்டை பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT