

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த மாமன்ற கூட்டத்தில் நேற்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் மாமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்டோர் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதால், தங்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்றுஅரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதற்கு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மாநகராட்சி மேயர்களுக்கு மாதம்ரூ.30 ஆயிரம், துணை மேயர்களுக்கு ரூ.15 ஆயிரம், மாமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதைசென்னை மாநகராட்சியில் நடைமுறைப்படுத்த, நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கல்வி, சுகாதாரம், பணிகள், வரிவிதிப்பு, நிதி, கணக்கு என 6நிலைக்குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆய்வு செய்ய ஏதுவாக ரூ.1 கோடியே 26 லட்சத்தில் 6 இன்னோவா கார்கள் வாங்கவும், ஓட்டுநர் செலவினமாக ஆண்டுக்கு ரூ.39 லட்சத்து42 ஆயிரம், பெட்ரோல் செலவினமாக ரூ.13 லட்சத்து 53 ஆயிரம், பராமரிப்பு செலவுக்காக ரூ.4 லட்சத்து 38 ஆயிரம் செலவிடவும் அரசுக்கு முன்மொழிவு அனுப்ப மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புளியந்தோப்பு அருகே ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்துக்கு செங்கை சிவம் (மேயரின் உறவினர்) பாலம் என பெயரிட்டு அரசாணை பெறப்பட்டதற்கு மன்றத்தில் பின்னேற்பு அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மொத்தம் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.