Published : 29 Jul 2023 06:15 AM
Last Updated : 29 Jul 2023 06:15 AM

அன்பு, தொண்டின் முகவரியான பெரியபுராணம்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புகழாரம்

சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்ற தெய்வச் சேக்கிழார் விழாவில், இளைஞர்கள் எழுதிய ‘தமிழ்த் தொண்டர்கள்’ என்ற நூலை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிட, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் சேக்கிழார் ஆராய்ச்சி மைய தலைவர் எஸ்.ஜெகதீசன், செயலாளர் சிவாலயம் ஜெ.மோகன், துணைத் தலைவர் அ.க.ராஜாராமன், எழுத்தாளர் உலகநாயகி பழனி, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

சென்னை: பெரியபுராணம் என்பது அன்பின் முகவரி, தொண்டின் முகவரி. தமிழ் திருத்தொண்டர்களை பற்றி இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெய்வச் சேக்கிழார் விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார்.

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 31-ம் ஆண்டு ‘தெய்வச் சேக்கிழார் விழா’ கடந்த 27-ம் தேதி தொடங்கியது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் 2-ம் நாள் நிகழ்வு நேற்று நடந்தது.

இதில், ‘தமிழ் திருத்தொண்டர்கள்’ என்ற நூலை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிட, திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்துராமன் பெற்றுக்கொண்டார். 10 இளம் எழுத்தாளர்களின் ஆய்வு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது:

நூல்களை பரிசாக வழங்க.. சேக்கிழார் தந்த பெரியபுராணம் என்பது அன்பின் முகவரி, தொண்டின் முகவரி. தமிழ் திருத்தொண்டர்களை பற்றி இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். கலைமகள் திருநாளில் புதிய புத்தகங்களை வாங்கி நண்பர்களுக்கு பரிசாக வழங்க வேண்டும். மகா கவிஞனாக இருந்தபோதும் அடக்கத்தின் உச்சமாக திகழ்ந்த பாரதியால் தமிழ் தகுதி பெற்றது. இவ்வாறு அவர் பேசினார்.

எஸ்பி.முத்துராமன் பேசும்போது, ‘‘அடுத்த தலைமுறையினர், தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து சேக்கிழார் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. தெ.முருகசாமிக்கு சிறந்த பேராசிரியர் விருது, மு.சிவச்சந்திரனுக்கு சிறந்த சமய அறிஞர் விருது, ஜி.வரதராஜனுக்கு சிறந்த சமய சமூகத் தொண்டர் விருது, குடந்தை வி.லட்சுமணனுக்கு சிறந்த ஓதுவார் விருது வழங்கப்பட்டது. முத்துமணி துரைசாமி அறக்கட்டளை சார்பில் சிறந்த நூல்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.

சேக்கிழார் ஆராய்ச்சி மைய தலைவர் எஸ்.ஜெகதீசன், செயலாளர் சிவாலயம் ஜெ.மோகன், துணை தலைவர் அ.க.ராஜாராமன், விஐடி மற்றும் தமிழ் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கோ.விசுவநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள், எழுத்தாளர் உலகநாயகி பழனி, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், சாரதா நம்பி ஆரூரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x