

சென்னை: விசிகவில் அமைப்பு ரீதியானமாவட்டங்கள் மறுவரையறை செய்யப்பட்டு, 144 மாவட்டங்களுக்கான செயலாளர்கள் மற்றும் 21 மண்டலச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தப் பட்டியலை கடந்த 26-ம் தேதி கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பாபு, ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "புதிய நிர்வாகிகள் உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும். பூத்கமிட்டி அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். வரும்2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை இப்போதிலிருந்தே முன்னெடுத்து, அதில் தனி கவனம் செலுத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கைஉள்ளிட்ட, கட்சியை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, வட மாவட்டங்களில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்" என்றார்.