Published : 29 Jul 2023 06:20 AM
Last Updated : 29 Jul 2023 06:20 AM
சென்னை: பஞ்சாப், ஹரியாணாவில் உள்ளது போல சிறைக் கைதிகள் இல்லற வாழ்வில் ஈடுபடும் வகையில் திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி என்பதால், கடந்த 8-ம் தேதி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உள்ளிட்டோருடன் புழல் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உயரதிகாரிகள், சிறைத்துறை அதிகாரிகள்,சட்டப்பணிகள் ஆணைக் குழுவினர், திருவள்ளூர் மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்டோருடன் கலந்தாய்வு மேற்கொண்டார். அதனடிப்படையில் புழல் சிறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ‘‘புழல் சிறையில் கூட்டம்அலைமோதுவதால் கூடுதலாக பார்வையாளர்கள் அரங்கம் கட்டப்பட வேண்டும். கைதிகளைப் பார்க்கசெல்லும் பார்வையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு போதிய எண்ணிக்கையில் இருபாலருக்கும் தனித்தனியாக கழிப்பறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கான கழிப்பறைகளை தினமும் இருமுறை கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
சிறைக்குள் பெண் கைதிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேவையான பால், பிஸ்கட்மற்றும் ஊட்டச்சத்து உணவு வகைகள், மழலையர் பள்ளி, விளையாட்டு கூடங்களை, சிறைக்குள் இருக்கிறோம் என்ற எண்ணம் அந்த குழந்தைகளுக்கு ஏற்படாத வண்ணம் உருவாக்கி கொடுக்க வேண்டும்.
வெளிநாட்டு கைதிகள் தங்களது உறவினர்களிடம் பேசவழிவகை செய்யும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும். கைதிகளை சிறை விதிகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும். அவர்களை எல்லை மீறி அடிக்கவோ, சித்ரவதை செய்யவோ கூடாது.
அத்துடன் பஞ்சாப், ஹரியாணாவில் உள்ளது போல சிறைக்கைதிகள் தங்களது தாம்பத்திய உரிமையை நிலை நாட்டிக்கொள்ள அவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபடும் வகையில் தமிழக அரசும் திட்டம் வகுக்க வேண்டும்” என பரிந்துரை செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT