Published : 29 Jul 2023 06:07 AM
Last Updated : 29 Jul 2023 06:07 AM
சென்னை: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் ஜி20 நாடுகளுக்கு தலைமைப் பங்கு இருப்பதை அந்நாடுகளில் தலைவர்கள் வலியுறுத்தி இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
ஜி20 மாநாட்டின் 4-வது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் கடந்த 26, 27-ம் தேதிகளில் சென்னை கிண்டியில் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக 27-ம் தேதி மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பங்கேற்று ஆதார வளப் பயன்பாடு மற்றும் சுழற்சிப்பொருளாதாரத் தொழில் கூட்டணியை தொடங்கிவைத்தார்.
இதன் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை குறித்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இக்கூட்டத்தில் பிற நாடுகளைச் சேர்ந்த 41 அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள், ஜி20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 225 பிரதிநிதிகள், 23 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் நிலையான மற்றும் நெகிழ்வான நீல மற்றும் கடல் சார்ந்த பொருளாதாரத்துக்கான சென்னை உயர் நிலைக் கொள்கைகள் என்ற இறுதி ஆவணம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஆவணம் ‘ஜி20 புதுடெல்லி தலைவர் பிரகடனம் 2023' உடன் இணைக்கப்படுவதற்காக தலைவர்களின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும்.
இறுதி ஆவணத்தையும், தலைமையின் சுருக்க உரையையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர். உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான முக்கியமான சவால்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
இறுதியாக மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, மாசுபாடு ஆகியவற்றின் சிக்கலான மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய சவால்களை சமாளிப்பதில் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பும், நிலையான மற்றும் நெகிழ்வான எதிர்காலத்தை நோக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறையும் பாராட்டுக்குரியது.
தனித்துவமான சவால்கள் மற்றும் திறன்கள் இருந்தபோதிலும், காலநிலை நடவடிக்கை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் தளராத அர்ப்பணிப்பைக் காட்டியதற்காக ஒவ்வொரு நாட்டுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் ஜி 20 நாடுகளுக்கு தலைமைப் பங்கு இருப்பதை அந்நாடுகளின் பிரதிநிதிகள் மீண்டும்வலியுறுத்தியுள்ளனர். மேலும் பாரிஸ் ஒப்பந்தத்தின் அனைத்து விஷயங்களின் லட்சிய நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, கடல் சார்ந்த திட்டமிடல் மற்றும் சுழற்சிப் பொருளாதாரம் போன்ற தலைப்புகள் ஜி20 விவாதங்களில் முதல்முறையாக விரிவாக விவாதிக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT