Published : 29 Jul 2023 11:13 AM
Last Updated : 29 Jul 2023 11:13 AM
திண்டுக்கல்: தக்காளி விலை ஒரு கிலோ 120 ரூபாயை எட்டியுள்ள நிலையில், திண்டுக்கல் மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.60-க்கு வியாபாரி ஒருவர் விற்பனை செய்ததால், பொதுமக்கள் வரிசையில் நின்று மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை தொடர்ந்து 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது. அதிகபட்சமாக வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையாகிறது. உழவர் சந்தையிலேயே ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனை யாகிறது.
இந்நிலையில், சில நாட்கள் மட்டுமே குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது. அதிக விலை கொடுத்து தக்காளி வாங்க மக்கள் சிரமப்படுவதைக் கண்டு, திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட் வியாபாரி சந்தோஷ்முத்து என்பவர் தனது கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்தார்.
இதை கேள்விப்பட்ட மக்கள் நேற்று காலை 6 மணி முதலே திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் உள்ள அவரது கடை முன் குவியத் தொடங்கினர். பின்னர், வரிசையில் நின்று தக் காளியை குறைந்த விலைக்கு வாங்கிச் சென்றனர்.
வியாபாரி சந்தோஷ்முத்து கூறுகையில், "ஆந்திராவிலிருந்து கொள்முதல் செய்து மக்களின் நலனுக்காக குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறேன். மூன்றரை டன் வரை தக்காளி உள்ளது. இதை மக்களுக்கு வெளிமார்க்கெட்டில் விற்பனையாகும் தொகையில் பாதியாக ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்ய உள்ளேன். பொதுமக்கள் அனைவருக்கும் தக்காளி கிடைக்கும் வகையில், ஒரு நபருக்கு 2 கிலோவுக்கு மேல் விற்பனை செய்யவில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT