

புதுச்சேரி: ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பெரிய மார்க்கெட் குபேர் அங்காடியை இடித்துவிட்டு கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் மற்றும் புதுச்சேரி பெரிய மார்க்கெட் குபேர் அங்காடி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சிவகுருநாதன், வடிவேலு உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி பெரிய மார்க்கெட் குபேர் அங்காடி தரைத்தளத்தில் செயல்படும் மார்க்கெட் ஆகும். அதிகாலை 3 மணிக்கு தொடங்கி காலை 9 மணி வரை மொத்த வியாபாரமும், அதன்பிறகு சில்லரை வியாபாரமும் நடைபெறும்.
லாரிகள் மூலம் பொருட்கள் வரவழைக்கப்பட்டு கடைகளுக்கு கொண்டு செல்லப்படும். புதுச்சேரியில் உள்ள அத்தனை மார்க்கெட்களுக்கும் இங்கிருந்துதான் பொருட்கள் வாங்கிச் செல்லப்படுகிறது.
இந்த மார்க்கெட் தரைத்தளத்தில் இருந்தால் மட்டும் தான் இது செயல்பட ஏதுவாக இருக்கும். ஆனால் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தில் மால்வடிவத்தில் இந்த மார்க்கெட்டை கொண்டு வர நினைக்கின்றனர். மார்க்கெட்டை முழுமையாக இடித்துவிட்டு 8 மாதங்களில் கட்டுமான பணியை முடித்து வியாபாரிகளிடம் கடைகளை அரசு ஒப்படைப்பதாக கூறியுள்ளது. மேலும் ஏஎப்டி மைதானம், வாணரப்பேட்டை எப்சிஐ குடோன் உள்ளிட்ட இடங்களில் தற்காலிகமாக கடைகளை மாற்றவும் வலியுறுத்தி வருகிறது.
மாதங்களில் மார்க்கெட்டை கட்டி கொடுக்க சாத்தியமே இல்லை. அரசு, காவல்துறையை பயன்படுத்தி அடக்கு முறையை கையாண்டு, அவர்கள் விரும்பும்படி ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மார்க்கெட்டை கட்ட நினைக்கின்றனர். இந்த மார்க்கெட்டை மால் வடிவத்தில் கட்டினால் இங்குள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்.
ஆடி மாதத்துக்குப் பின் புதிய மார்க்கெட் கட்ட அடிக்கல் நாட்ட உள்ளதாக முதல்வர் தலைமையில் நடந்தகூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய காவல்படையை வரவழைக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே நாளை மறுநாள்பெரிய மார்க்கெட் குபேர் அங்காடியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்; கருப்புக்கொடி ஏற்றப் படும்.
புதுச்சேரியில் இயங்கும் அனைத்து மார்க்கெட் வியாபாரிகளிடமும் ஆதரவுகேட்டுள்ளோம். அவர்களும் கடையடைப்பு நடத்த தயாராக உள்ளனர். இண்டியா கூட்டணியும் ஆதரிப்பதாக கூறியுள்ளது. எனவே அரசு எங்களது கோரிக்கையை கேட்டு மார்க்கெட்டை கட்ட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பலக்கட்டங்களாக போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டனர்.