Published : 08 Nov 2017 09:30 AM
Last Updated : 08 Nov 2017 09:30 AM

மழையால் டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்களுக்கு பாதிப்பு இல்லை: வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தகவல்

வடகிழக்குப் பருவமழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்களுக்கு பாதிப்பு இல்லை என தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.

மழையால் குடிசை வீடுகளின் மண்சுவர் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில், கும்பகோணம் வட்டத்தில் சுவர் இடிந்து பாதிக்கப்பட்ட 31 குடும்பத்தினருக்கு ரூ.1.31 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் துரைக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், குளம், ஏரி ஆகியவை தூர் வாரப்பட்டதால் மழைநீர் வடிந்து செல்கிறது. இந்த மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். இதில், முதல் கட்டமாக கும்பகோணம் வட்டத்தில் 31 குடும்பங்கள், பாபநாசம் வட்டத்தில் 4 குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வட்டங்களில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் அம்மாபேட்டை, திருவையாறு, பாபநாசம் ஆகிய பகுதிகளில் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளனவா என மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து ஆய்வு செய்தேன். வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.

நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு செய்து வருகிறார். அங்கும் மழைநீர் வடிந்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக வடகிழக்குப் பருவமழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா நெற்பயிர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெற்றதால்தான் தற்போது மழைநீர் வாய்க்கால்களில் வடிந்து வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x