

வேலூர்: கொடநாடு கொலை வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி மாநிலம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு, அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் ஆதரவு அளித்துள்ளார். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஓபிஎஸ் மற்றும் டிடிவி தரப்பினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சியினர், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் நேற்று மனு ஒன்றை அளித்தனர். அதில், ‘‘அதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட சிலரால் நடத்தப்படும் குழுவினர்களால் ஆகஸ்ட் 1-ம் தேதி நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் எங்கள் கட்சி கொடி, தோரணம், சின்னங்களை பயன்படுத்த காவல் துறையினர் அனுமதி அளிக்கக்கூடாது.
மீறினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் டிடிவி அணியினர் பயன்படுத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என எச்சரித்து அதிமுக மாவட்டச் செயலாளர் அளித்துள்ள மனுவால் காவல் மற்றும் உளவுத்துறை வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.