

சென்னையில் 32 ஏக்கர் நிலப்பரப்பில் இசை பல்கலைக்கழகம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் துணைவேந்தராக வீணை காயத்ரி பொறுப்பேற்றார். இந்த இசைப் பல்கலைக்கழகம் தற்போது தற்காலிகமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆண்டு வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், நாதசுரம் உள்ளிட்ட 8 பாடப்பிரிவுகளில் புதிதாக எம்.ஏ. (மியூசிக்) படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இசை பல்கலைக்கழகத்தின் முதலாவது சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் வீணை காயத்ரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பதிவாளர் கே.சவ்ரிராஜன் முன்னிலை வகித்தார். 21 சிண்டிகேட் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், புதிதாக தொடங்கப்படும் 8 முதுகலை படிப்புகள் மற்றும் டிஜிட்டல் போட்டோகிராபி தொடர்பான முதுகலை டிப்ளமோ படிப்புக்கும் ஒப்புதல் பெறப்பட்டது. புதிய இசைக்கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் அளிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இசை பல்கலைக்கழகம் அமைக்க சென்னை சோழிங்கநல்லூரில் 31.80 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கீடுசெய்து உத்தரவு பிறப்பித்த தகவலும் சின்டிகேட் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.