போலீஸாக பணியாற்றிக் கொண்டே ‘நீட்’ தேர்வில் வெற்றி - மருத்துவப் படிப்பில் சேர உள்ள தருமபுரி இளைஞர்

போலீஸாக பணியாற்றிக் கொண்டே ‘நீட்’ தேர்வில் வெற்றி - மருத்துவப் படிப்பில் சேர உள்ள தருமபுரி இளைஞர்
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையில் பணியாற்றியபடியே ‘நீட்’ தேர்வில் வென்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் முதுகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். கடந்த 2016-ம் ஆண்டு பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். மருத்துவர் ஆக விரும்பிய சிவராஜுக்கு அப்போதைய சூழலில் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பி.எஸ்சி., வேதியியல் பயின்றார். இளநிலைப் பட்டப் படிப்பை முடித்த அவர், 2020-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலைக் காவலராக தேர்வானார்.

தற்போது ஆவடியில் பணியாற்றி வருகிறார். பணிக்கு சென்ற நிலையில் தனது மருத்துவக் கனவு தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கு அவரது சகோதரர்கள் உள்ளிட்ட குடும்பத்தார் ஊக்கமளிக்க, நீட் தேர்வு எழுதினார். கடந்த ஆண்டில் நீட் தேர்வில் 268 மதிப்பெண் பெற்ற சிவராஜ் மீண்டும் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வையும் எழுதினார். இந்தத் தேர்வில் அவருக்கு 400 மதிப்பெண்கள் கிடைத்தது. எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர சிவராஜ் தகுதி பெற்றார்.

தொடர்ந்து, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது சேர்க்கை பெற்றுள்ளார். மருத்துவப் படிப்பின் மீது அவர் கொண்டிருந்த தீராத தாகம் காரணமாக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் அடைந்துள்ளார் சிவராஜ். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு அவரது மருத்துவக் கனவை நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி தற்போது பார்த்து வரும் பணியில் இருந்து விலகி பின்னர் மருத்துவக் கல்லூரியில் சேர இருப்பதாக சிவராஜ் தெரிவித்தார். சிவராஜுக்கு, அவரது கிராமத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in