

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் வருகையையொட்டி மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்கினார். இந்நிகழ்வை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மாலை 4.25 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் 4.35 மணிக்கு ஹெலிகாப்டரில் மண்டபத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையத்தில் அவரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மத்திய அமைச்சரின் வருகையொட்டி விமான நிலையத்திற்கு உள், வெளி பகுதியில் தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவு சார்பில்,பெருங்குடி சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால், அப்பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் துணை ஆணையர்கள் அரவிந்த், பிரதீப், மங்களேசு வரன், கூடுதல் துணை ஆணையர் திருமலைக்குமார் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் அடங்கிய சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பிடட்ட நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
மத்திய அமைச்சர் விமான நிலையத்துக்கு வெளியே வராமல் உள்பகுதியில் இருந்தே ஹெலிகாப்டரில் சென்றாலும், விமான நிலையத்தை சுற்றிலும் குறிப்பிட்ட தூரம் வரை பாதுகாப்பு பலப்படுத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.