

சென்னை: சென்னை மாநகராட்சியின் அனைத்து மருத்துவமனைகளிலும் பல் மருத்துவ பிரிவு அமைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (ஜூலை 28) மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது, 142வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி எழுப்பிய கேளவிக்கு பதில் அளித்த மேயர் பிரியா, "சைதாபேட்டையில் 25 கோடி ரூபாய் மதிப்பில் 161 கடைகளுடன் புதிய நவீன காய்கறி அங்காடி அரசின் நிர்வாக அனுமதி பெற்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். மேலும், 38வது வார்டு வார்டு கணேஷ் கேள்விக்கு பதில் அளித்த மேயர் பிரியா, "சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கான பணியாளர்களை விரைந்து நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஆணையர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் தற்போது 16 இடங்களில் பல் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் அனைத்து மண்டலங்களிலும் பல் மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இறுதியாக, 104வது வார்டு உறுப்பினர் செம்மொழி கேள்விக்கு பதில் அளித்த மேயர் பிரியா,”சென்னை மாநகராட்சியில் தற்போது 616 மூன்று சக்கர குப்பை சேகரிக்கும் மிதிவண்டி உள்ளது. இதற்கு மாற்றாக 350 மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் வாங்க டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.