

நெய்வேலி: என்எல்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வன்முறை ஏற்பட்டதன் எதிரொலியாக, கடலூர் - நெய்வேலி மார்க்கத்தில் இயக்கப்படும் தொலைதூர பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அன்புமணி கைது: நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது என்எல்சி நுழைவு வாயில் முன்பு தனது தொண்டர்களுடன் நுழைய முற்பட்ட அன்புமணி ராமதாஸை போலீஸார் தடுத்தி நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளு இடைய அன்புமணி ராமதாஸை கைது செய்ய காவல்துறை வாகனம் வரவழைக்கப்பட்டது.
கல்வீச்சு, தடியடி: இதனால் ஆத்திரம் அடைந்த பாமக தொண்டர்கள், காவல் துறை வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீஸார் அவர்களை விரட்டி அடித்தனர். சிறிது நேரத்தில் அன்புமணி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். அவரை கைது செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, பாமகவினர் அவரை கைது செய்யக்கூடாது என்று வலியுறுத்தி வாகனம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிச்சூடு: அப்போது சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவல்துறையினர், பத்திரிகையாளர் உள்ளிட்டோர் காயமடைந்தனர். தொடர்ந்து கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். ஆனால், கல்வீச்சுத் தாக்குதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். இதனால், என்எல்சி நுழைவு வாயில் பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.
சாலை மறியல்: இதனைத்தொடர்ந்து, அன்புமணி ராமதாஸை கைது செய்த போலீஸார் வேறொரு வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸை விடுவிக்க வலியுறுத்தி அந்தப் பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை கும்பகோணம் சாலையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேருந்துகள் நிறுத்தம்: இந்நிலையில், கடலூரில் இருந்து நெய்வேலி மார்க்கமாக திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, இந்த என்எல்சி பிரச்சினை தொடங்கியதில் இருந்தே பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்கப்பட்டன. இதையடுத்து பாதுகாப்பு கருதி, கடலூரில் இருந்து விருத்தாச்சலம், நெய்வேலி, திருச்சி, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், வெளியூர் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், கடலூரில் இருந்து சிதம்பரம் வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் அதிகமான பயணிகள் செல்கின்றனர். அதேபோல், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கும் மிக குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. அன்புமணி கைதைத் தொடர்ந்து கடலூரில் பேருந்துகள் இயக்கம் மிக குறைவாக காணப்படுகிறது. | விரிவாக வாசிக்க > நிலம் கையகப்படுத்துதலை என்எல்சி நிறுத்தாவிட்டால் மிகப் பெரிய விளைவுகள்: அன்புமணி எச்சரிக்கை
இதனிடையே, “பாட்டாளி மக்கள் கட்சி அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சி. கைது, தடியடி, கண்ணீர்புகைக் குண்டுவீச்சு போன்ற அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பாமகவை கட்டுப்படுத்த முடியாது” என்று நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். | வாசிக்க > நெய்வேலி வன்முறை | கைது, தடியடி, அடக்குமுறைகளால் பாமகவை கட்டுப்படுத்த முடியாது: ராமதாஸ்
6 மணிக்குப் பிறகு... இதனிடையே, பள்ளி கல்லூரிக்கு சென்றுள்ள மாணவர்கள் வீடு திரும்பியதை உறுதிபடுத்திய பிறகு, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு, கடலூர் மாவட்டத்தில் முழுமையாக பேருந்து சேவையை நிறுத்த போக்குவரத்துதுறை சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.