Published : 28 Jul 2023 03:20 PM
Last Updated : 28 Jul 2023 03:20 PM

கரோனா பேரிடர் கால மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை: வைகோ வேண்டுகோள்

வைகோ | கோப்புப் படம்.

சென்னை: கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா பேரிடர் காலத்தில் உயிரை துச்சமெனக் கருதி கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்த்த ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு, அரசு மருத்துவர் பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும். உலகம் முழுவதும் 2020 -ஆம் ஆண்டு முதல் 2022 -ம் ஆண்டு வரை கரோனா பெருந்தொற்று பரவி லட்சக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான கரோனா நோய்த் தொற்றாளர்ளுக்கு, மருத்துவர்கள் தங்களது இன்னுயிரைப் பொருட்படுத்தாமல் மருத்துவ சேவையாற்றினார்கள்.

தெருவுக்கு தெரு ஆயிரம் ஆயிரம் என கரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை மணிக்கொருமுறை பல்கிப் பெருகியது. நாடு முழுவதும் கரோனா பேரச்சம் நிலவி வந்த நேரத்தில், மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயின்று முடித்த நிலையில் இருந்த அனைரும் கரோனா பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்திட முன்வரலாம் என முந்தைய தமிழக அரசு அறிவிப்பு செய்தது. இந்த அறிவிப்பை ஏற்று, மருத்துவப் பணியாற்றிட வந்த நூற்றுக் கணக்கான மருத்துவர்கள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கரோனா காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் குறைந்தபட்சம் நூறு நாட்கள் பணியாற்றினாலே, அவர்களுக்கு நிரந்தர பணி வாய்ப்பு வழங்கலாம் என ஒன்றிய அரசின் மருத்துவத் துறை 2021 - ஆம் ஆண்டு மே 3- ஆம் தேதி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டு இருந்தது. ஆனால், கடந்த ஆட்சியில் இந்த மருத்துவர்களுக்கு உரிய பணிப்பாதுகாப்பு வழங்காமல் தற்காலிகமாக பணி வழங்கியதால், இன்று ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் வேலை இழந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அரசு மருத்துவர்களை சேர்ப்பதற்கு ஏப்ரலில் தேர்வு நடத்தி முடித்துள்ளது.

இந்தத் தேர்வில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஆணையால், தமிழ்நாட்டு மருத்துவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கான வாசல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை நான் மனதாரப் பாராட்டுகின்றேன். அதேபோல, கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி, தற்போது பணி வாய்ப்பு இல்லாமலும், தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு, சிறப்பு மதிப்பெண்கள் வழங்கி, அரசு பணி வாய்ப்பு வழங்கிடுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x