Published : 16 Nov 2017 08:30 AM
Last Updated : 16 Nov 2017 08:30 AM

கோவையில் 2-வது நாளாக பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆளுநருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்: அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு; ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி செய்ய பாஜக முயற்சிப்பதாக புகார்

கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 2-வது நாளாக பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். ஆளுநரின் ஆய்வுக்கு மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், ஜி.ராமகிருஷ்ணன், அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநர் மூலம் தமிழகத்தை ஆட்சி செய்ய மத்திய பாஜக அரசு முயற்சி செய்வதாகவும் அதிகார வரம்பை மீறி ஆளுநர் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கோவை சென்ற ஆளுநர், அங்கு அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் உட்பட பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆனால் அமைச்சர்களோ, எம்பி, எம்எல்ஏக்களோ இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் ஆளுநரின் இந்த நடவடிக்கையை அமைச்சர்கள் வரவேற்றனர். அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் திடீரென ஆய்வுக் கூட்டம் நடத்தியதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். அதிகார வரம்பை மீறிய செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்தியிருப்பது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். கோவையைத் தொடர்ந்து திருப்பூரிலும் ஆய்வை தொடர்வது கவலை அளிக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது.

இது தமிழகத்தில் இரு தலைமைகளை உருவாக்கி அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும். முதல்வர் ஆய்வா, ஆளுநர் ஆய்வா என்ற கேள்வி அதிகாரிகள் மட்டத்தில் எழுந்து இரு தலைமைச் செயலகங்கள் இயங்கும் அபாயகரமான சூழல் ஏற்படும்.

மாநில சுயாட்சி கொள்கையை மற்ற மாநிலங்களுக்கு கற்றுக் கொடுத்த திமுக, ஆளுநரின் ஆய்வுகளை உறுதியாக எதிர்க்கிறது. ஒரு பொம்மை அரசை வைத்துக்கொண்டு ஆளுநர் மூலம் தமிழகத்தை ஆட்சி செய்ய மத்திய பாஜக அரசு திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் ஆளுநரின் ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திக்குத் தெரியாத காட்டில் நிற்கும் தமிழக அரசு நிர்வாகத்தை மேலும் சிதைத்து பேரிடரை ஏற்படுத்தி விட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். ஆளுநர் தனது ஆய்வுகளை உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): கோவையில் அதிகாரிகளுடன் ஆளுநர் நடத்திய ஆய்வை ஒருபுறம் வரவேற்றாலும், மறுபுறம் ஆட்சியாளர்களின் அவலத்தை பறைசாற்றும் விதமாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற நிகழ்வு தமிழகத்தில் நடந்ததாக தெரியவில்லை. ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்த மத்திய பாஜக அரசு முயற்சிப்பதையே இந்த ஆய்வு காட்டுகிறது. டெல்லி, புதுச்சேரியின் நிலைமை தமிழகத்துக்கும் வந்துவிட்டதே என மக்கள் எண்ணக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): டெல்லி, புதுச்சேரியில் உள்ள துணைநிலை ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை உதாசீனம் செய்துவிட்டு சர்வாதிகாரிகளைப்போல செயல்படுகின்றனர். அந்த வரிசையில் இப்போது தமிழக ஆளுநரும் இணைந்துள்ளார். மாநில உரிமைகளின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற வேலையை அனுமதிக்க முடியாது.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): தமிழக ஆளுநர் கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும், திட்ட அமலாக்கம் குறித்தும் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டிருப்பது வரம்பு மீறிய செயலாகும். பாஜகவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட கைப்பாவையாகத்தான் மாநில அரசு செயல்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டுவதாக இந்தச் செயல் அமைந்திருக்கிறது.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): ஆளுநர் ஆய்வுக் கூட்டம் நடத்தியிருப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது. அரசியல் சட்ட உரிமையை மீறும் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அமைச்சரவை பரிந்துரைப்படியே ஆளுநர் செயல்பட முடியும். ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட சட்டத்தில் இடம் இல்லை. எனவே, ஆளுநர் தனது ஆய்வுக் கூட்டங்களை கைவிட வேண்டும்.

திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்): அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு நடத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டு விட்டதா அல்லது அதற்கான முன்னோட்டமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாநில நிர்வாகத்தில் தலையிடும் ஆளுநரின் இந்தச் செயலுக்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் (பாமக இளைஞரணித் தலைவர்): ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகியாக ஆளுநர் இருந்தாலும் அவருக்கென்று தனித்த அதிகாரங்கள் எதுவும் இல்லை. அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தவோ, பணிகளை ஆய்வு செய்யவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. கோவையில் ஆளுநர் ஆய்வு செய்தது மாநில அரசின் அதிகாரத்தில் குறுக்கிடும் செயல்.

டிடிவி தினகரன் (அதிமுக - அம்மா- துணைப் பொதுச்செயலாளர்: முதல்வர் பழனிசாமியின் அரசு, தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, மாநிலத்தின் நலன்களை அடகு வைக்க துளியும் தயங்காது என்பதையே ஆளுநரின் ஆய்வு உணர்த்துகிறது. நீட் தேர்வு முதல் தொடர்ந்து தமிழகத்தின் நலன்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஆளுநரின் ஆய்வு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது.

புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இருக்கும்போது அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை செய்வது, அவர்களுக்கு உத்தரவிடுவது ஆளுநரின் பணியல்ல. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாநில அரசின் அன்றாட நிர்வாகத்தில் தலையிட்டு இடையூறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வியாதி தமிழகத்திலும் பரவியுள்ளது. இந்நிலை மாற வேண்டும்.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்): ஆளுநரின் அதிகார வரம்பு மீறலை அதிமுகவும், பாஜகவும் மட்டுமே நியாயப்படுத்துகின்றன. தூய்மை இந்தியா பணியைத் தவிர மற்றவையெல்லாம் ஆளுநரின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை அல்ல. தமிழகத்துக்கு ஆபத்து வந்து விட்டதையே ஆளுநரின் ஆய்வு காட்டுகிறது. ஆளுநரின் இந்த சட்ட மீறல் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, நேற்று 2-வது நாளாக கோவையில் ஆளுநர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். பல்வேறு திட்டப் பணிகளையும் பார்வையிட்ட அவர், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்வேன் என்றும் தெரிவித்துள்ளாார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x