Published : 28 Jul 2023 06:52 AM
Last Updated : 28 Jul 2023 06:52 AM

பிரபல ஓவியர் மாருதி காலமானார் - முதல்வர் இரங்கல்

சென்னை: தமிழகத்தின் பிரபல ஓவியர்களுள் ஒருவரான மாருதி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் கலை உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டையில் 1938-ம்ஆண்டு ஆக.28-ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் ரங்கநாதன். புதுக்கோட்டையில் 10-ம் வகுப்பு வரை படித்தார். அவரது தந்தை ஆசிரியராக இருந்ததால், வீட்டில் கிடைக்கும் சாக்பீஸை கொண்டு ரங்கநாதன் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார்.

பின்னர் சென்னை வந்த இவர்,1969-ம் ஆண்டில் திரைப்படங்களுக்கு பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம், பெயர் எழுதும் பணியில் சேர்ந்தார். பிரபல எழுத்தாளர்களின் தொடர் கதைகளுக்கும் ஓவியம் தீட்டியுள்ளார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சுபாஷினி, சுஹாசினி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இவர் திரைப்படங்களுக்கு பேனர்வரையும் வேலையையும் நாளிதழ்களில் அட்டைப்படங்கள் வரையும்வேலையையும் ஒரே நேரத்தில் செய்தார். இதனால் ‘மாருதி’ என்னும் புனைப் பெயரில் வரையத் தொடங்கினார். மேலும் உளியின்ஓசை, பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களின் ஆடை வடிவமைப்பாளராகவும் மாருதி பணியாற்றியுள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மார்க்சியம், பெரியாரியம் என முற்போக்கு சிந்தனை கொண்டவர். 86 வயதானஇவர் புனேவில் தனது மகள் வீட்டில்தங்கியிருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மாலைகாலமானார். அவரது இறுதிச் சடங்கு புனேவில் இன்று காலை நடைபெறுகிறது. மாருதியின் மறைவுக்கு கலை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் இரங்கல்: ஓவியர் மாருதி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘தமிழ்வார இதழ்களில் தமது தூரிகையால் கோலோச்சி - தமிழகஅரசின் கலைமாமணி விருது பெற்றஓவியர் மாருதியின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். தனித்துவம் மிக்க தனது ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில்நீங்கா இடம்பெற்றிருப்பவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திரைப்படங்களில் பணியாற்றியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பத்திரிகை உலக நண்பர்கள் மற்றும்வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x