

சேலம்: சந்திரயான்-3 விண்கலத்துக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகளை வழங்கியதற்காக, இந்திய விண்வெளித் துறையின் திரவ இயக்க திட்ட மையம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சந்திரனை ஆராய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ரூ.615 கோடி செலவில், சந்திரயான் -3 விண்கலத்தை, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இது, இந்தியர்கள் அனைவருக்கும் மிகப் பெரும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் கொடுத்துள்ளது.
இந்நிலையில், சந்திரயான் விண்கலம் உருவாக்குவதற்கு, சேலம் இரும்பாலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடு பயன்படுத்தப் பட்டிருப்பது தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. சந்திரயான் திட்டத்துக்கு, வெற்றிகரமான பங்களிப்பை வழங்கியதற்காக, இந்திய விண்வெளித் துறையின் திரவ இயக்க திட்ட மையம், சேலம் இரும்பாலைக்கு பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், சந்திரயான் 3 விண்கலத்தின் இன்ஜின் சேம்பரில் பொருத்துவதற்காக ஐ.சி.எஸ்.எஸ்- 1218- 321 என்ற குளிரூட்டப்பட்ட ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தகடு வழங்கியதற்காக, சேலம் இரும்பாலைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் திட்டத்துக்காக, சேலம் இரும்பாலை தொடர்ச்சியாக 3 முறை, பங்களிப்பை வழங்கியுள்ளது என்று சேலம் இரும்பாலை சிஐடியு பொதுச்செயலாளர் கே.பி.சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்தியாவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தி செய்யக்கூடிய ஒரே பொதுத் துறை நிறுவனம், சேலம் இரும்பாலை மட்டுமே. உள்நாட்டிலேயே சந்திரயான் விண்கலம் தயாரிக்கப்பட்டது என்ற பெருமையில், அரசின் பொதுத்துறை நிறுவனம் இருக்கிறது. எனவே, சேலம் இரும்பாலையை தனியாரிடம் ஒப்படைக்காமல் மத்திய அரசு தொடர்ந்து நடத்த வேண்டும்’ என்றார்.