

ஈரோடு: மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசல் இயக்கவும், வாகனங்கள் கடந்து செல்லவும் தடை விதிக்கபட்டுள்ளது. இதனால் தெங்குமரஹாடா உள்ளிட்ட மலைக் கிராமங்கள் துண்டிக்கப் பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம் பாளையம் ஆகிய மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு 1,500 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மாயாற்றினைக் கடந்து, பவானிசாகர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியும்.
மாயாற்றின் குறுக்கே பாலம் இல்லாத நிலையில், ஆற்றில் குறைவாக நீர் செல்லும் போது, வாகனங்கள் மூலமும், பரிசல் மூலமும் கடந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், மருத்துவம், இதர பணிகளுக்குச் செல்பவர்கள் சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆற்றினை பரிசல் மூலமும், வாகனங்கள் மூலமும் கடக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, தெங்குமரஹாடா, கல்லம்பாளையம், அல்லிமாயாறு, சித்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பவானிசாகர் நீர்மட்டம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகாரிப்பால், அணையின் நீர்மட்டம் நேற்று மேலும் ஒன்றரை அடி உயர்ந்தது. நேற்று முன்தினம் 81 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று மாலை 82.84 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 6,214 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையில் இருந்து 1,105 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.